வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1.65 லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழக தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1,65,054 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்து, கடந்த 19ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் வரைவு பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும், 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

வரைவு வாக்காளர் பட்டியலானது தமிழகம் முழுவதும் உள்ள 75000 வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது. இதை வாக்காளர்கள் பார்வையிட்டு வரும் சூழலில், அதில் நீக்கப்பட்டவர்கள் தங்கள் பெயரை பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்து வருகின்றனர். பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், பெயர் சேர்ப்புக்கு படிவம் 6ஐ பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி அலுவலரிடம் வழங்கலாம்.

பெயர் சேர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவிப்போர், படிவம் 7 மற்றும் முகவரி மாற்றத்துக்கு படிவம் 8 ஆகியவற்றை வரும் ஜனவரி 18ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. கடந்த 5 நாட்களில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த நாட்களாக நடைபெற்று வரும் சிறப்பு முகாமில் ஏராளமானோர் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில் டிசம்பர் 19ம் தேதி முதல் நேற்று (டிச.24) வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கு படிவம் 6 மற்றும் 6 ஏ படிவங்களை நிரப்பி 1 லட்சத்து 65 ஆயிரத்து 054 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதற்கு ஆட்சேபனை தெரிவித்து படிவம் 7 ஐ நிரப்பி 1,211 பேர் மனு அளித்துள்ளனர். உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அவர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories: