அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம்: போராட்டம் கைவிடப்பட்டது

சென்னை: மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யக் கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஒப்பந்த செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் வெளியிட்ட அறிக்கை: தற்போது, செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதால், அவர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படாமல் இருந்து வருகிறது.

ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு ஒன்றிய அரசின் மகப்பேறு சட்டம், 1961ன் படி ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு தேசிய நலவாழ்வுக் குழும் வழியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ளது. கொரோனா காலத்தில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்ட 3,260 செவிலியர்களில் பணியில் சேராத 390 பேர் நீங்கலாக, 2146 செவிலியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு பணிபுரிகின்றனர்.

மீதமுள்ள 724 செவிலியர்களுக்கும் விரைவில் பணி நியமனம் வழங்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திமுக அரசு ஒப்பந்த செவிலியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊதியம் ரூ.14,000லிருந்து ரூ.18,000 ஆக மே-2021 முதல் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வூதிய உயர்வு ஒருசில ஒப்பந்த செவிலியர்களுக்கு சில நிர்வாக காரணங்களால் பெற இயலாமல் உள்ளனர் என அறிய வருகிறது.

அவர்களுக்கு விரைவில்ஊதிய உயர்வுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு நடவடிக்கைளின் காரணமாக, முதற்கட்டமாக 1000 நிரந்தர பணியிடங்களில் ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள். அரசின் இந்த முடிவை ஏற்று, ஒப்பந்த செவிலியர்கள் தங்களது போராட்டத்தை முடித்துக் கொள்கிறார்கள்.

Related Stories: