சென்னை: சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற, இசைமுரசு நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசியதாவது: 11 வயதில் பள்ளிக்கூடத்தில் பாட தொடங்கி, 15 வயதில் மேடைகளில் பாட ஆரம்பித்து, மக்கள் பாடகராக தன் வாழ்நாள் முழுவதும் வலம் வந்தவர். நாகூர் ஹனிபா போராட்ட வாழ்வை இன்றைய இளைஞர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். சிறிய வயதிலேயே நீதிக்கட்சி தொண்டராக இருந்த ஹனிபா நீதிக்கட்சியின் கூட்டம் மாநாடுகள் எங்கு நடந்தாலும் சென்று பாடுவார். இந்த உணர்வுப் பயணம் நீதிக்கட்சி, திராவிடர் கழகமாக பரிணமித்து, திமுக உருவான பிறகும் தொடர்ந்தது கழகத்தின் வளர்ச்சிக்கு ஹனிபா குரல் துணை நின்றது.
அழைக்கின்றார் அண்ணா, அருமை மிகும் திராவிடத்தின் துயர் துடைக்க இன்றே’ என்று ஹனிபா பாடுவதை கேட்டால் உணர்ச்சி பொங்காமல் ஒரு தமிழரால் இருக்க முடியாது. 1949ல் திமுக தொடங்கப்பட்டபோது, அந்த தொடக்க விழாவில் பாடிய அவர், அதற்கு பிறகு, திமுக தொண்டராக, தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். இவரது தமிழுணர்வு பற்றி தலைவர் கலைஞர் என்ன சொன்னார் என்றால், “தமிழுக்கு ஒரு தீங்கென்றால், அந்த தீங்கினை தடுத்து நிறுத்திட, தமிழர் நலம் காத்திட, தமிழ்மொழி காத்திட தோள்தட்டி தன்னை ஒப்படைத்துக் கொள்ளக்கூடிய தியாகச் சீலர்தான், நாகூர் ஹனிபா” என்று சொல்வார்.
“என்னுடைய ரத்தத்தை எடுத்து சோதித்தால்கூட அதில் வேறு கட்சியின் கலப்பு இருக்காது” என்று சொன்னார் நாகூர் ஹனிபா. அதனால் தான், ஹனிபா மறைந்தபோது, தலைவர் கலைஞரும், நானும் ஓடோடி சென்றோம். அதைத்தொடர்ந்து, நாகூரில் நடைபெற்ற, அவரது படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கெடுத்து புகழஞ்சலி செலுத்தினேன். அப்படிப்பட்ட எங்கள் இசைமுரசுக்கு நான் முன்னின்று நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதை என்னுடைய வாழ்நாள் பேறாக நினைக்கிறேன். நாகூர் ஹனிபா கழகத்திற்கு மட்டும் சொந்தக்காரர் இல்லை, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் சொத்து அவர். எல்லோரும் சொன்னார்கள், அவர் பாடிய “இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லை என்று சொல்லுவதில்லை” என்ற பாடல், தமிழ்நாட்டில் இருக்கும் எல்லோருடைய வீட்டிலும் ஒலிக்கும் பாடல், அதுதான், அவரது இசையின் வலிமை.
சில மாதங்களுக்கு முன்பு, ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், பலரும் மதங்களைக் கடந்து, இசை முரசு பாடலை பாடுவது, மிகவும் வைரலாக போனது, இந்த உணர்வுதான் தமிழ்நாடு. அதனால்தான், இசைமுரசு நாகூர் ஹனிபா நூற்றாண்டு தொடங்கியதும், நாகூரில் அவர் இல்லம் அமைந்துள்ள தெருவிற்கு “இசை முரசு நாகூர் இ.எம்.ஹனிபா தெரு” என்று பெயர் சூட்டினோம். சில்லடி கடற்கரைக்கு செல்லும் சாலையில் “இசை முரசு நாகூர் இ.எம்.ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா”வை சில தினங்களுக்கு முன்பு துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்திருக்கிறார்.
‘தமிழரசு’ இதழின் சார்பில் ஹனீபா நூற்றாண்டு மலரை சிறப்பாக தயாரித்து வெளியிட்டிருக்கிறோம். இன்னும் ஏராளமானவர்கள் திமுகவை வலுப்படுத்த வர வேண்டும். உங்களின் திறமையை உங்களின் அறிவுக்கூர்மையை பயன்படுத்திக்கொள்ள, சமூகத்தை வளர்த்தெடுக்க திமுக எப்போதும் தயாராக இருக்கிறது. திமுக இந்த மண்ணில் உள்ள வரை பெரியார், அண்ணா, கலைஞரின் புகழ் தமிழர் நெஞ்சங்களில் உள்ள வரை நாகூர் ஹனிபா நம்முடன் புகழுருவில் வாழ்வார். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
