சென்னை: 52வது நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரியார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பெரியாரின் 52வது நினைவு நாள் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பெரியாரின் சிலை மற்றும் அவரது உருவப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தினர். இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, டி.ஆர்.பி.ராஜா, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அதேபோல் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுக முன்னணியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு: வளைந்து நின்ற முதுகுகள் தலைநிமிர்ந்து தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்த தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம். தமிழர்கள் தலைகுனியாமல், ஆதிக்கத்துக்கு அடிபணியாமல், பகுத்தறிவுச் சிந்தனையோடு சக மனிதரை நேசித்துச் சமத்துவத்தைப் பேணுவதே, இனமானமே பெரிதென அவர் உழைத்த உழைப்புக்கு நாம் செலுத்தும் நன்றி.
பெரியார் எனும் பெருஞ்சூரியனைத் திருடவும் முடியாமல், தின்று செரிக்கவும் முடியாமல் திண்டாடும் பகைவர் கூட்டத்தின் வஞ்சக எண்ணங்களை வீழ்த்திட ஒற்றுமை உணர்வோடு ஓரணியில் தமிழ்நாடு நின்றால், என்றும் வெற்றி நமதே.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
