திருத்துறைப்பூண்டி,டிச.24: கட்டிமேடு அரசு பள்ளியில் தேசிய விவசாயிகள் தினம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி மாணவர்கள் மரக்கன்று நட்டினர். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய விவசாயிகள் தினம் நிகழ்ச்சி தேசிய பசுமைப் படை மாணவர்களால் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலு தலைமை வகித்து பேசும்போது, இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் சரண்சிங் பிறந்த தினமே தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக அளவில் உணவு தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் நிலையில் எதிர்காலம் விவசாயிகள் கையில் தான் உள்ளது என்பதை நினைவுப்படுத்தி உணவு பாதுகாப்பை வலியுறுத்தியும் டிசம்பர் 23ஆம் தேதி தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் ஆகும் என்று கூறி இந்தியாவில் இன்றும் மக்கள் தொகையில் 60 சதவிகிதத்திற்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்றார். நிகழ்ச்சியையொட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ரகு செய்திருந்தார்.
