சாயல்குடி, டிச.16: சிக்கல் தனி யூனியனாக அறிவிக்கக்கோரி நேற்று கடையடைப்பு, மனித சங்கிலி போராட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி, போகலூர், நயினார்கோயில், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், மண்டபம், திருப்புல்லாணி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றின் கீழ் 429 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.
இந்நிலையில் 2014ல் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சிக்கல் தனி ஊராட்சி ஒன்றியமாக உருவாக்கப்படும் என 110 விதியின் கீழ் அறிவித்தார். ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் அந்த அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டது. இந்தநிலையில் டிச.10ம் தேதி கமுதி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 13 பஞ்சாயத்துகள், கடலாடி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 20 பஞ்சாயத்துக்கள் என 33 பஞ்சாயத்துகளை பிரித்து மாவட்டத்தில் 12வது ஊராட்சி ஒன்றியமாக சாயல்குடி புதிய ஊராட்சி ஒன்றியமாக அறிவித்து அரசு அரசானை வெளியி்டப்பட்டது.
இதுபோன்று சிக்கலையும் புதிய ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி சிக்கல், வாலிநோக்கம், கீழச்செல்வனூர், கொத்தங்குளம், தனிச்சியம், ஓடைக்குளம், இதம்பாடல், வல்லக்குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளை சேர்ந்த கிராமமக்கள் சிக்கல், வாலிநோக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர். மேலும் இப்பகுதியில் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
