காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பறவைகளால் தாக்கப்பட்ட இதய வடிவிலான முகம் கொண்ட அமெரிக்கன் பான் ஆந்தையை, தீயணைப்பு மற்றும் மீட்பு படை துறையினர் மீட்டு, வனத்துறையிடம் ஒப்படைத்தனர். காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பெரிய தெரு, ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கழுகு போன்ற பறவைகளால் தாக்கப்பட்ட பறவை ஒன்று பறக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு படைகள் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், பறவைகளால் தாக்கப்பட்டு, பறக்க இயலாமல் இருந்த இதய வடிவம் கொண்ட ஆந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இந்த, ஆந்தை குறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் கூறுகையில், ‘உடலின் மேல் பகுதி வெளிர் பழுப்பு நிறத்திலும், அடிப்பகுதி தூய வெள்ளை நிறத்திலும் கருப்புப் புள்ளிகளுடன் காணப்படும் இந்த ஆந்தை வகைகள் அமெரிக்க நாட்டை சேர்ந்தவை. உலகிலேயே மிகச் சிறந்த கேட்கும் திறன் கொண்ட உயிரினங்களில் ஒன்றான இந்த வகை ஆந்தை, கும்மிருட்டில் கூட, ஒரு எலி நகரும் சத்தத்தை வைத்து அதைத் துல்லியமாகப் பிடித்துவிடும் ஆற்றலும், சப்தமே இல்லாமல் பறக்கம் தன்மையும் கொண்டது. இந்த ஆந்தையை, கழுகு போன்ற ஏதோ பறவைகள் இறக்கையில் தாக்கியுள்ளன.
அதனால் தான் ஆந்தை பறக்க எவ்வளவு முயற்சித்தும் பறக்க இயலாமல், மற்ற பறவைகளின் தாக்குதலில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள அதிக சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. இந்த பறவைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது, என்றார். அதனைத்தொடர்ந்து, மீட்கப்பட்ட அமெரிக்கன் பான் ஆந்தை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
