முதியவர்களுக்கு உணவு கொடுத்த காவலாளி மீது தாக்குதல்

பெ.நா.பாளையம், டிச. 12: கோவை கவுண்டம்பாளையம், மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் ரவி (43). இவர், சாய்பாபாகாலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாதுகாவலராக வேலைபார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, துடியலூர் வாரச்சந்தை பகுதியிலுள்ள மூன்று முதியவர்களுக்கு சாப்பிடுவதற்காக உணவு கொடுத்துள்ளார். இந்தப் பகுதியில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த யாசகம் கேட்கும் ஒரு சிலர் தங்கி உள்ளனர். ரவி உணவு கொடுக்கும்போது அங்கிருந்த சிறுவர்கள் அவரிடம் உணவு கேட்டுள்ளனர். அதற்கு அவர் உணவு தீர்ந்து விட்டது.

நாளைக்கு கண்டிப்பாக உங்களுக்கு கொண்டுவந்து தருகிறேன் என்று கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த ராமகிருஷ்ணன் (24) என்பவர், ஏன் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கவில்லை என்றுகேட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டு, மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது ரவியுடன் வந்த அவரது நண்பர் பிரின்ஸ், சமாதானம் செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ராமகிருஷ்ணன், கீழே கிடந்த தடியை எடுத்து இருவரையும் தாக்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாக ரவி துடியலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: