தி.மு.க. மக்கள் கிராம சபை மூலம் 9 ஆண்டுகால தெருவிளக்கு பிரச்னைக்கு தீர்வு

கோவை, ஜன. 13:  கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் 9 ஆண்டுகளாக தெரு விளக்கு பிரச்னைக்கு தி.மு.க. மக்கள் கிராம சபை கூட்டத்தின் மூலம் தீர்வு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட வெள்ளக்கிணறு 26-வது வார்டு ஹவுசிங் போர்டு பகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக தெருவிளக்கு இல்லாமல் இருந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் பல முறை ஆளும் கட்சியினரிடம் மனு கொடுத்தும் பலனில்லை. இந்த நிலையில், கடந்த மாதம் நடந்த தி.மு.க. சார்பில் வெள்ளக்கிணறு பகுதியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது சம்மந்தப்பட்ட பகுதிக்கு தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 9 ஆண்டுகள் முடியாத பிரச்னைக்கு கிராம சபை கூட்டம் மூலம் தீர்வு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த செந்தில் தங்கவேல் கூறியதாவது: கவுண்டம்பாளையம் தொகுதி 26-வது வார்டு வெள்ளக்கிணறு ஹவுசிங் யூனிட்டில் கடந்த 9 வருடத்திற்கு முன்பு அரசு திட்டத்தின் மூலம் 98 வீடுகளை விற்றனர். இதில், நாங்கள் ஒரு வீடு வாங்கினோம். அப்போது முதல் இங்கு தெரு விளக்கு கிடைக்காது. இதனால், பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தோம். அதிகளவில் வரி கட்டும் நபர்கள் எங்கள் பகுதியில்தான் இருக்கின்றனர்.

தெரு விளக்கு வேண்டும் என கோரி எங்கள் தொகுதி எம்.எல்.ஏ.விடம் பல முறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டம் அறிவிப்பு கேள்விப்பட்டேன். வெள்ளக்கிணறு பகுதியில் கடந்த டிசம்பர் 13ம் தேதி கிராம சபை கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர், துடியலூர் பொறுப்பாளர் அருள்குமார் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு, மிகப்பெரிய நம்பிக்கையுடன் சென்று 9 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் தெருவிளக்கு இல்லை என கூறினேன். இதன் தீர்வாக நேற்று முன்தினம் (கடந்த 11-ம் தேதி) எங்கள் பகுதியில் எங்கு எல்லாம் தெருவிளக்கு இல்லையோ அங்கு எல்லாம் தெருவிளக்கு பொருத்தப்பட்டது. ஒரு கிராம சபை கூட்டம் மூலமே இவ்வளவு பெரிய மாற்றம் என்றால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விடியலை நோக்கி தமிழகம் நகரும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையில், இந்த சம்பவத்தை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் சுட்டிகாட்டியுள்ளார். அதில், “மக்கள் கிராம சபையினால் குறைகள் தீருமா என கேட்ட தமிழக அரசுக்கு ஓர் ஆதாரம் இது. கவுண்டம்பாளையம் தொகுதியில் 9 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாத பிரச்னை தீர்க்கப்பட்டிருக்கிறது. தி.மு.க.விடம் சொன்னால் தீரும். 4 மாதங்களில் ஆட்சி மாறும். மக்களின் ஒவ்வொரு குறையும் தீர்வு பெறும்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>