திருவனந்தபுரம்: சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் 2 முன்னாள் தலைவர்கள், முன்னாள் உயரதிகாரிகள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்குள் முடிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.நேற்றுடன் உயர்நீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்தது. இந்நிலையில் இந்த விசாரணை தற்போது முக்கிய கட்டத்தில் இருப்பதாலும், கூடுதல் ஆதாரங்களை சேகரிக்க வேண்டியிருப்பதாலும் விசாரணையை முடிக்க மேலும் கால அவகாசம் வேண்டும் என்று கூறி சிறப்பு புலனாய்வுக் குழு சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை பரிசீலித்த உயர்நீதிமன்றம், விசாரணையை முடிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மேலும் ஒரு மாதம் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டது. இதற்கிடையே இந்த வழக்கில் 3வது நபராக சேர்க்கப்பட்டுள்ள தேவசம் போர்டு முன்னாள் ஆணையர் மற்றும் தலைவரான வாசு ஜாமீன் கோரி கொல்லம் விஜிலன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை நேற்று நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதற்கிடையே இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை மற்றும் விசாரணை விவரங்களை தங்களுக்கு அளிக்கக் கோரி அமலாக்கத்துறை சார்பில் கொல்லம் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக ஒரு மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. கேரள அரசிடம் ஆலோசித்த பின்னரே முதல் தகவல் அறிக்கை மற்றும் வழக்கு விவரங்களை அளிக்க முடியும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
