கோவையில் 13 வீடுகளில் கைவரிசை போலீஸ் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த கொள்ளையன் சாவு: பிடிபட்டது எப்படி? பரபரப்பு வாக்குமூலம்

 

கோவை: கோவையில் 13 வீடுகளில் கொள்ளையடித்து வழக்கில், போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட கொள்ளையன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கோவை கவுண்டம்பாளையத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 13 வீடுகளில் புகுந்து 56 பவுன் நகைகள், ரூ.3 லட்சம், 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டது. இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின்படி கோவைப்புதூர் திருநகரில் வீட்டில் பதுங்கியிருந்த 3 பேரை நேற்று முன்தினம் பிடிக்க சென்றனர்.

அப்போது போலீஸ்காரர் பார்த்திபனை அரிவாளால் வெட்டி தப்ப முயன்றதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேருக்கும் குண்டு காயம் ஏற்பட்டது. காயமடைந்த உத்தரபிரதேச மாநிலம் மஜித்புரா பகுதியை சேர்ந்த இர்பான் (48), காஜி வாலா பகுதியை சேர்ந்த கல்லு ஆரிப் (60), காஜிபூர் பகுதியை சேர்ந்த ஆசிப் (45) ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ஆசிப் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருக்கு ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு நோய்கள் இருப்பதாக தெரிகிறது. இறந்த ஆசிப் குறித்த விவரங்கள் கேட்டு தகவல்களை காஜிதாபாத் மாவட்ட போலீசாருக்கு கோவை போலீசார் மெயில் அனுப்பியுள்ளனர்.

கைதான இர்பான், கல்லு ஆரிப் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ‘‘ஆட்டோவில் சென்று 3 மணி நேரத்தில் 13 வீட்டில் திருடி விட்டு அதே ஆட்டோவில் திரும்பி விட்டோம். அதிக நபர்கள் வருவதால் எங்கள் மீது சந்தேகம் வராது என நினைத்தோம். ஆனால் கண்காணிப்பு கேமராவில் எங்களை அடையாளம் பார்த்து போலீசார் தேடி வந்து விட்டார்கள். வேறு எந்த ஏரியாவில் கொள்ளையடிக்கலாம் என நாங்கள் திட்டமிட தயாரான போது சிக்கி விட்டோம். போலீசாரிடம் தப்ப முயன்ற போது எங்களை சுட்டு பிடித்துவிட்டார்கள்’’ என்றனர்.

* கூட்டாளிகள் இருவர் கைது

திருநகர் காலனியில் வசித்து வந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த தாவுத் (19), பர்மான் (23) ஆகியோர் சரக்கு ஆட்டோவில் பாத்திர வியாபாரம் செய்வது போல் நடித்து அரசு ஊழியர் தங்கியிருந்த வீடுகளை நோட்டம் விட்டு பூட்டிய வீடுகளை கண்டறிந்துள்ளனர். இவர்கள் அளித்த தகவலின் பேரில் கடந்த 27ம் தேதி இர்பான், கல்லு ஆரிப், ஆசிப் ஆகிய 3 பேரை கோவைக்கு வரவழைத்து கூட்டு கொள்ளை திட்டம் வகுத்து அதிரடியாக செயல்பட்டுள்ளனர். இதையடுத்து தாவுத்,பர்மான் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

* மாதம் ரூ.35 ஆயிரம் வாடகை

கொள்ளையர் தங்கியிருந்தது 3 பெட்ரூம் கொண்ட பங்களா வீடு. இதை ஒருவர் மாதம் ரூ.20 ஆயிரம் வாடகைக்கு வாங்கி வடமாநில வியாபாரிகளை உள்வாடகைக்கு அமர்த்தி மாதம் ரூ.35 ஆயிரம் பெற்று வந்துள்ளார். கொள்ளையர்கள் தப்பிய ஆட்டோவின் டிரைவர் அயூப் கான் மற்றும் ஹவுசிங் யூனிட்டில் உள்ள சில தொழிலாளர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: