அடிப்படை வசதிகளை கேட்டு பிடிஓ அலுவலகம் முன் மக்கள் ஆர்ப்பாட்டம்

பென்னாகரம், ஜன.7: பென்னாகரம் அருகே, அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, பிடிஓ அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடியில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு சாக்கடை கால்வாய் மூடிகள் உடைந்துள்ளதால், குழந்தைகள், முதியோர் மற்றும் வாகன ஓட்டிகள் என பல்வேறு தரப்பினர் சாக்கடையில் விழுந்து, விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. அதேபோல், குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே உடைந்துள்ளது. மேலும் 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே, குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால்,  குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. பெரும்பாலன மினி டேங்குகள் பழுதாகி காணப்படுகிறது. உயர்மின் கோபுர விளக்குகள் எரிவதே இல்லை. இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் பாஸ்கரிடம் பலமுறை தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், நேற்று காலி குடங்களுடன் பென்னாகரம் ஊரக வளர்ச்சி அலுவலகம் முன் திரண்ட மக்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தன், ரேணுகா, சேர்மன் கவிதா ராமகிருஷ்ணன், துணை சேர்மன் அற்புதம் அன்பு உள்ளிட்டோர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கூத்தப்பாடியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், உடனடியாக அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்று, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: