காவல் அலுவலர்களாக போலீசார் நியமனம்

தர்மபுரி, ஜன.7: தர்மபுரி மாவட்டத்தில் குற்றங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை தடுக்கும் வகையில், கிராமங்களுக்கு காவல் அலுவலராக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று எஸ்பி தெரிவித்தார். தர்மபுரி மாவட்டத்தில், காவல்துறை சார்பில் அனைத்து கிராம ஊராட்சிகளில் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்களாக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று நல்லம்பள்ளி அருகே ஏலகிரி கிராமத்தில், கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் நியமிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், எஸ்பி பிரவேஷ்குமார் பேசியதாவது:மாவட்டம் முழுவதும் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் கிராமத்திற்கு சென்று குற்றம் மற்றும் அனைத்து வித தகவல்களையும் சேகரித்து, அதனை எஸ்பிக்கு நேரடியாக தெரிவித்து குற்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கிராமங்களில் நடக்கும் திருவிழாக்கள், ஊர்முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் குற்ற சம்பவங்கள் குறித்த தகவல்களை சேகரிக்க வேண்டும். ஜாதி, மத மோதல்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னை வரக்கூடாது என்பதற்காக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊராட்சி மன்றத்தலைவர், விஏஓ, கிராம உதவியாளர் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் என குறைந்தது 100 பேரை கொண்ட வாட்ஸ்அப் குழுவை ஏற்படுத்தி, கிராமத்தில் நடக்கும் சம்பவங்களை அறிந்துகொள்ள வேண்டும். தகவல்களின் ரகசியம் காக்க வேண்டும். ஏலகிரிக்கு எஸ்ஐ வாசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஊர் மக்கள் எந்த குறையாக இருந்தாலும், சந்தேகப்படும் நபர்கள் புதிதாக கிராமத்தில் வந்தாலும், உடனடியாக காவலருக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு எஸ்பி பேசினார்.

Related Stories: