பட்டுக்கோட்டை: சென்னையில் நடந்த ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற 78 வயதான மூதாட்டி ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே லட்சியம் என தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அணைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் திலகவதி (78). விளையாட்டில ஆர்வம் உள்ள இவர், கடந்த 1966ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி ஒரத்தநாடு அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து 40 ஆண்டுகள் பணிபுரிந்து பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை தாய்லாந்து, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 22 நாடுகள் பங்கேற்ற சென்னையில் நடந்த 23வது ஆசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட திலகவதி, முதலிடம் பெற்று 4×400 அஞ்சல் ஓட்ட போட்டியில் தங்கப்பதக்கத்தையும், நீளம் தாண்டுதலில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும் வென்று அபார சாதனை படைத்து சாதித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘நான் இறப்பதற்குள் நமது நாட்டிற்காக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வெல்வதே எனது லட்சியம்’ என்றார்.
