வீட்டின் பூட்டு உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளி, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை சென்னைக்கு மூதாட்டி சென்ற நிலையில்

செய்யாறு, நவ. 1: செய்யாறு அருகே மூதாட்டி வீட்டில் ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருட்கள், பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமம் ரத்னா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி வேதகவுரி(70). கணவர் இறந்து விட்டதால் வேதகவுரி தனியாக வசித்து வருகிறார். இவரது மகனுக்கு திருமணமாகி சென்னை ஐயப்பன் தாங்கலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வேதகவுரி, கடந்த 20ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார். அங்கு தங்கிவிட்டு நேற்றுமுன்தினம் மதியம் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கலைத்து வீசப்பட்டிருந்தது.

பூஜை அறையில் இருந்த வெள்ளியால் ஆன காமாட்சி அம்மன் விளக்கு, தூபம் உள்ளிட்ட ஒன்றரை கிலோ எடையுள்ள வெள்ளி பூஜை பொருட்கள், ரொக்கம் ரூ.7 ஆயிரம், பெரிய எல்இடி டிவி உள்பட மொத்தம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து தூசி போலீசில் நேற்றுமுன்தினம் மாலை வேதகவுரி புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து, வெள்ளிப்பொருட்கள், பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Related Stories: