ரங்கநாத பெருமாள் கோயில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு வந்தவாசி நகரில் உள்ள

வந்தவாசி, மார்ச் 31: வந்தவாசி நகரில் உள்ள ரங்கநாத பெருமாள் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து சென்றனர். வந்தவாசி நகரில் பழமை வாய்ந்த ரங்கநாயகி சமேத ரங்கநாதர் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் பிரமோற்சவ விழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சந்திர பிரபை, யாணை, சிம்ம வாகனம், அனுமந்த வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினம்தோறும் மூலவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், திருக்கல்யாணம் உற்சவம் உள்ளிட்டவைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து நேற்று தேர் திருவிழா நிகழ்ச்சி நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் ரங்கநாயகி சமேத ரங்கநாதர் தேரில் வைக்கப்பட்டு திருத்தேர் ஊர்வலம் காந்தி சாலை, சீதாராம நாயுடு தெரு, அச்சரப்பாக்கம் சாலை, கே.ஆர்.கே உடையார் தெரு, சன்னதி தெரு வழியாக தேர் நிலையை வந்தடைந்தது. அப்போது வந்தவாசி டவுன் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதேபோல் தேசூரில் உள்ள பெருமாள் கோயில் தேரோட்டம் நிகழ்ச்சி நடந்தது. தேர் கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு தெள்ளார் மழையூர் சாலை, புகையிலைகார தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று தேர் கோயிலை வந்தடைந்தது.

Related Stories: