ஏரிக்கரை அருகிலேயே தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன் வளர்ப்பு

நல்லம்பள்ளி,டிச.30:தமிழகத்தில் ஆப்பிரிக்கன் மீனை வளர்க்க அரசு தடை செய்துள்ளது. இந்த மீன்கள், நமது பாரம்பரிய மீன் இனங்களை அழிக்கும் அபாயம் மட்டு் அல்லாமல், உணவாக பயன்படுத்துவோருக்கு பல்வேறு நோய்களை உருவாக்கும் தன்மை கொண்டது. இதனால் இந்த மீன்களை குட்டைகளில் யாரும் வளர்க்கவோ, உணவாக சந்தைப்படுத்தவோ கூடாது என மத்திய, மாநில அரசுகள் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்தும், பலர் தடையை மீறி வளர்த்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் தொப்பையாறு அணை, நாகாவதி அணை உள்ளிட்ட நீர் தேக்கங்களில் ரோகு, கட்லா, மீர்கால், புல் கொண்டை, சாதா கொண்டை போன்ற மீன்கள் வளர்க்கப்படுகின்றன.

அதே போல் தனியார் அமைப்பினர் மீன் குட்டைகளையும், பண்ணைகளையும் அமைத்து ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்து, விற்பனை செய்து வருகின்றனர். நல்லம்பள்ளி அடுத்துள்ள நார்த்தம்பட்டி பகுதியில் 2 ஆண்டுகளுக்கு மேலாக  ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்த்து வருகின்றனர். இதற்கு உயிரிழந்த  கோழிகள், கழிவுகள் உணவாக வழங்கப்படுகின்றன. இந்த பண்ணையில் உள்ள தண்ணீர்  கருமையாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. நார்த்தம்பட்டி ஏரிக்கரை அருகிலேயே  அமைக்கப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து  அப்பகுதி மக்கள் பலமுறை புகார் கூறியும் நல்லம்பள்ளி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். இது போன்ற  மீன்களை வளர்க்கும் பண்ணைகளை கண்டறிந்து முற்றிலும் அழிக்க மாவட்ட  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மீன்களை உண்பதால் தோல் வியாதி, புற்றுநோய், பாலியல் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தடை செய்துள்ளதாக மீன்வளத் துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: