தர்மபுரி பி.அக்ரகாரம் முனியப்பன் கோயில் விழா

தர்மபுரி, டிச.30: தர்மபுரி பிளியனூர் அக்ரகாரம் முனியப்பன்கோயில் விழாவில் ஆயிரக்கணக்கான கோழி, ஆடு பலியிட்டு பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். தர்மபுரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பி.அக்ரகாரம் முனியப்பன் கோயிலில் மார்கழி மாதம் இரண்டாம் செவ்வாய்கிழமை வருடாந்திர விழா ஒவ்வொரு ஆண்டும் நடக்கும். அதுபோல் நேற்று கோயில் விழா நடந்தது. இவ்விழாவையொட்டி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, நேர்த்திக்கடனாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆடு, 1000க்கும் மேற்பட்ட கோழி பலியிட்டு வழிபட்டனர்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரகணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 25 அடி உயரம், 12 அடி அகலத்திலும் முனியப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரு புறமும் உள்ள குதிரை, சிப்பாய் மற்றும் குதிரை வீரன் சிலைகளுக்கு பூஜைசெய்து வழிப்பட்டனர்.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், செயல்அலுவலர் சபேஸ்வரி மற்றும் ஊழியர்கள் கொரோனா தொற்று குறித்து ஒலிபெருக்கி மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கொரோனா தடுப்பு ஊரடங்கினால், கோயில் வளாகத்தில் தற்காலி விழாக்கடைகள், ராட்டினங்கள் அமைக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிந்து வரவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டது. கோயிலில் பக்தர்கள் கூட்டம் கடந்த ஆண்டுபோல் இல்லை. குறைவான அளவில் வந்திருந்தனர். குற்றங்களை தடுக்க போலீசார் மாறுவேடங்களில் கண்காணித்து வந்தனர்.

Related Stories: