பருவமழை பெய்தும் வறண்ட சோகத்தூர் ஏரி

தர்மபுரி, டிச.21: தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை பரவலாக பெய்தும் வறண்டு கிடக்கும் சோகத்தூர் ஏரியில் முட்செடிகள் வளர்ந்து காடுபோல் மாறியுள்ளது. தர்மபுரி அருகே சுமார் 220 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது சோகத்தூர் ஏரி. இந்த ஏரி மூலம், 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆனால், நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு காரணமாக, இந்த ஏரி கடந்த 20 ஆண்டாக நீர்வரத்தின்றி காணப்படுகிறது.

இதனால் தென்பெண்ணை ஆற்று நீரை கால்வாய் மூலம் கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை பெய்த நிலையில், சோகத்தூர் ஏரிக்கு தண்ணீர் வராமல் வறண்டு கிடக்கிறது. பல ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாத நிலையில், கரைகள் உடைந்து முட்புதர்களாக காட்சி அளிக்கிறது. இந்த ஏரி, கடந்த 2 ஆண்டுக்கு முன் தூர்வாரப்பட்டது. ஆனால், பராமரிப்பு இல்லாததால், முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இந்த ஏரியில் நீர் தேங்கினால், சுமார் ஒரு கி.மீ தூரம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனவே, நீராதாரத்தை பெருக்க ஏரியை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘சோகத்தூர் ஏரியில் உள்ள முட்செடிகளை அகற்றி தூர்வாரினால் சோகத்தூர், கடகத்தூர், செல்லியம்பட்டி, எஸ்.கொல்லப்பட்டி உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் செழிப்படையும். தற்போது பருவமழை பெய்து வருவதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரிக்கு தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: