ரத்து செய்யப்பட்ட பட்டாவை மீண்டும் வழங்க கோரிக்கை

தர்மபுரி, டிச.15: தர்மபுரி ஜெய்பீம் மக்கள் நல பேரவை மற்றும் பொதுமக்கள் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 1995ம் ஆண்டு தர்மபுரி கோல்டன் தெரு, அம்பேத்கர் காலனி, நியூ காலனி, பிடமனேரி, பிடிஓ காலனி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் சுமார் 1050பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. பின்னர் வருவாய் துறை அதிகாரிகள் பயனாளிகளான எங்களுக்கு, எந்த இடம் என அளந்து காட்டவில்லை. இது தொடர்பாக பொதுமக்கள் சார்பில் பலமுறை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை, எந்தவித முன்அறிவிப்பும் இன்றி ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ரத்து செய்து அறிவிப்பானை வெளியிடப்பட்டது. எனவே, கலெக்டர் மேற்கண்ட அறிக்கையை ரத்து செய்து ஏற்கனவே வழங்கப்பட்ட பயனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட இடத்தை உறுதி செய்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.பாலக்கோடு அருகே நம்மாண்டஅள்ளி மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: நம்மாண்டஅள்ளி மேல்தெருவில், கடந்த 30 வருடமாக பயன்படுத்திவந்த பொதுப் பாதையை அதே பகுதியை சேர்ந்த சிலர், தங்களுக்கு சாதகமாக தனிநபர் பட்டாவாக மாற்றியுள்ளனர். இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, தவறுதலாக பட்டா வழங்கியதை நீக்கி, பொது பட்டாவாக மாற்றி, பொதுப்பாதையை மீட்டு தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: