நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைத்ததாக புகார் தர்மஸ்தலா வழக்கில் புகார்தாரர் கைது: 10 நாள் காவலில் எடுத்து எஸ்.ஐ.டி விசாரணை

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டதாக முன்னாள் தூய்மைப் பணியாளர் அளித்த புகாரை கர்நாடக அரசு அமைத்த எஸ்.ஐ.டி விசாரிக்கிறது. இந்த விவகாரத்தில் தர்மஸ்தலாவிற்கு எதிராக ஒரு மாபெரும் சதி நடந்திருப்பதாக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரே தெரிவித்திருந்தார். இந்நிலையில், புகார்தாரர் கூறியதைப் போல நூற்றுக்கணக்கான சடலங்கள் அவர் அடையாளம் காட்டிய இடங்களில் கிடைக்கவில்லை.

இதையடுத்து மாஸ்க் அணிந்து இதுவரை முகத்தை காட்டாமல் சுற்றித்திரிந்த புகார்தாரர் சி.என்.சின்னையாவை எஸ்.ஐ.டி அதிகாரிகள் கைது செய்தனர். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கையில் எடுத்து வந்த எலும்பு கூடு குறித்து தனக்கு தெரியாது என்றும், யாரோ கொடுத்த அழுத்தத்தின் பேரில் இப்படி நடந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். புகார்தாரரின் வாக்குமூலங்கள் மற்றும் அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் ஆகியவற்றில் முரண்பாடுகள் இருந்த நிலையில், அவரை கைது செய்து எஸ்.ஐ.டி அதிகாரிகள், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, பின்னர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

* அரசு தலையீடு இல்லை
அமைச்சர் பரமேஸ்வர், புகார்தாரர் கைது செய்யப்பட்டது உண்மை தான். அவர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். விசாரணை நடந்துகொண்டிருப்பதால், எந்த தகவலையும் வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாது. எஸ்.ஐ.டி புகார்தாரரை கைது செய்து விசாரித்து வருகிறது.

எஸ்.ஐ.டி மற்ற விவரங்களைத் தெரிவிக்கும். புகார்தாரர் எந்தப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது எஸ்.ஐ.டிக்குத்தான் தெரியும். புகார்தாரர் கொடுத்த புகாரின் பேரிலேயே தர்மஸ்தலா வழக்கில் விசாரணை நடத்தப்பட்டது. இப்போது அவர் கைது செய்யப்பட்டு, அவரது வாக்குமூலங்கள் பெறப்படுகிறது என்று கூறினார்.

Related Stories: