அதிகாரிகள் ஆய்வு டாஸ்மாக் கடைகளில் வசதி இல்லாததால் வாய்க்கால் பாலக்கட்டைகளை பார்கள் ஆக்கிய குடிமகன்கள்

கரூர், டிச. 11: பார்கள் இல்லாத காரணத்தினால் வாய்க்கால் பாலக்கட்டைகளை பார்களாக பயன்படுத்தும் நிகழ்வுகள் நடைபெறுவது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளை ஒட்டி பார்கள் செயல்படுவதில்லை. இதனால் டாஸ்மாக் கடைகளில் சரக்குகளை வாங்கும் குடிமகன்கள், கடைகளின் அருகிலேயே நின்று குடித்து விட்டு சென்று விடுகின்றனர். மேலும், கிராம பகுதிகளில் சாலைகளின் இடையே அமைக்கப்பட்டுள்ள பாலக்கட்டைகளில் அமர்ந்து சரக்கு அடித்து விட்டு செல்கின்றனர். இரவு நேரங்களில் கிராம பகுதி பாலக்கட்டைகளில் இதுபோன்று குடிமகன்கள் அமர்ந்து சரக்கு அடிப்பதால், மக்கள் வாகனங்களிலும், நடந்தும் செல்லவும் அச்சத்தில் உள்ளனர். ஒரு சில சமயங்களில் இதுபோல செல்பவர்கள் குடிமகன்களால் பாதிப்புக்கும் உள்ளாகி வருகின்றனர் என கூறப்படுகிறது. எனவே, அந்தந்த பகுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போலீசார், இது குறித்து கண்காணித்து, இதுபோல செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: