ஒன்றிய அரசு முடிவு செய்துள்ள 2 அடுக்கு ஜிஎஸ்டியை அமல்படுத்த ஆலோசனை கூட்டம் நாளை துவக்கம்: நிர்மலா சீதாராமன் உரையாற்றுகிறார்

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என 4 வரி அடுக்குகளாக இவை பிரிக்கப்பட்டன. இந்நிலையில், 4 அடுக்கு விகிதங்களுக்குப் பதிலாக 5 சதவீதம் மற்றும், 18 சதவீதம் என இரண்டு அடுக்கு வரிப்பிரிவாக இதனை மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களுக்கான தீபாவளி பரிசாக இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்த உடனேயே ஒன்றிய அரசு, 2 அடுக்கு ஜிஎஸ்டி குறித்த புதிய திட்டத்தை அமைச்சர்கள் குழுவுடன் பகிர்ந்து கொண்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி விகிதங்களை சீரமைப்பதற்கான அமைச்சர்கள் குழுவிடம் இது தொடர்பான முன்மொழிவை நிதியமைச்சகம் சமர்ப்பித்துள்ளது. அதில், இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி விகிதத்தை அமல்படுத்த உத்தேசித்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, 5, 12, 18 மற்றும் 28 ஆகிய 4 வரி அடுக்குகளில் இனி 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் மட்டுமே அமலில் இருக்கும் எனவும், 28 சதவீத வரிப்பிரிவுக்குப் பதிலாக 40 சதவீத வரிப்பிரிவு அமல்படுத்தப்படும் என நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது 28 சதவீத வரி என்பது, உயர் ரக மோட்டார் சைக்கிள்கள், ஏசி, பிரிட்ஜ், சொகுசு கார்கள், சிகரெட், புகையிலை போன்ற உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் மீது விதிக்கப்படுகிறது.

இதற்கு பதிலாக 40 சதவீதம் என்ற சிறப்பு வரிப்பிரிவு சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இந்த புதிய வரி அடுக்கு முறையை அமல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நாளை துவங்க உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஒன்றிய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ஜிஎஸ்டி புதிய வரி அடுக்கு விகிதத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலில் அங்கம் வகிக்கும் மாநில அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நாளை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. 2 நாள் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றுகிறார்’’, என்றனர்.

* காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி விலக்கு?
ஒன்றிய அரசு மேற்கொள்ள உள்ள வரிச் சீர்திருத்தத்தில், காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காப்பீடு பிரீமியம் தொகையில் 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. இது 5 சதவீதமாக குறைக்கவோ அல்லது முழுமையாக வரி விலக்கு அளிக்கவோ முடிவு எடுக்கப்படலாம் என நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.

Related Stories: