தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி ராகுல் உள்பட 300 எம்பிக்கள் கைது: நாடாளுமன்றம் அருகே பரபரப்பு

புதுடெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராகவும், போலி வாக்காளர்கள் மூலம் வாக்குகள் திருடப்படுவதை கண்டித்தும் நாடாளுமன்றத்தில் இருந்து தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்ட ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்க உள்ள நிலையில், அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தீவிர திருத்தம் என்ற பெயரில் பாஜவுக்கு எதிரான வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்படுவதாக, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதவிர, பாஜவுடன் தேர்தல் ஆணையம் கைகோர்த்து, போலி வாக்காளர்களை பட்டியலில் சேர்த்து வாக்கு திருட்டில் ஈடுபடுவதாகவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

கர்நாடகாவில் மகாதேவபுரா சட்டப்பேரவை தொகுதியில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை ராகுல் காந்தி கடந்த 7ம் தேதி ஆதாரங்களுடன் நிரூபித்தார். இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது. பீகாரை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை நாடு முழுவதும் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள நிலையில், ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், பீகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணி செல்ல இந்தியா கூட்டணி உட்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் முடிவு செய்தனர். இதன்படி, தேர்தல் ஆணையம் நோக்கிய எதிர்க்கட்சிகளின் பேரணி போராட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. காலை 11.30 மணிக்கு நாடாளுமன்ற நுழைவாயிலான மகர் துவாரில் 300க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கூடினர்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த இப்பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாடியின் அகிலேஷ் யாதவ், சிவசேனாவின் சஞ்சய் ராவத், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, திரிணாமுல் காங்கிரசின் டெரிக் ஓ பிரையன் மற்றும் திமுக, ஆர்ஜேடி, இடதுசாரிகள் என 25 கட்சிகளைச் சேர்ந்த 300 எம்பிக்கள் பங்கேற்றனர். அங்கு அவர்கள் தேசிய கீதத்தை பாடி பேரணியாக புறப்பட்டனர்.

பேரணியில், தமிழக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, செல்வகணபதி, தமிழச்சி தங்கபாண்டியன் ,ஜோதிமணி, சு.வெங்கடேசன், துரை வைகோ உள்ளிட்டோர் ‘வாக்கு திருட்டு’க்கு எதிரான பதாகைகளுடன் கலந்து கொண்டனர். ‘பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்+வாக்கு திருட்டு = ஜனநாயகப் படுகொலை’, ‘பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’ என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பிரமாண்ட பேனர்களை எம்பிக்கள் ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.

நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலையில், பாதி வழியிலேயே பிடிஐ அலுவலகம் முன்பாக 2,000 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தடுப்பு கம்பிகளை அமைத்து பேரணியை தடுக்க தயார் நிலையில் இருந்தனர். தேர்தல் ஆணையத்திற்கு கூட்டமாக செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதால், 30 எம்பிக்கள் மட்டும் செல்லுமாறு ஒலி பெருக்கி மூலம் போலீசார் எச்சரித்தனர். ஆனால், எம்பிக்கள் தொடர்ந்து முன்னேறிய நிலையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதை கண்டித்து சாலையிலேயே அமர்ந்து எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, திரிணாமுல் காங்கிரசின் மஹுவா மொய்த்ரா, காங்கிரசின் சஞ்சனா ஜாதவ், ஜோதிமணி உள்ளிட்ட பெண் எம்பிக்கள் சிலர் தடுப்பு வேலிகளை தாண்டி செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தடுப்பு கம்பிகளை தாண்டி குதித்தார். இதனால், ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து எம்பிக்களையும் போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றினர். அவர்களை திருமண மண்டபத்தில் சிறிது நேரம் அடைத்து வைத்து பின்னர் போலீசார் விடுவித்தனர். நாடாளுமன்றத்தின் முன்பாக ராகுல் காந்தி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* மயக்கமடைந்த பெண் எம்பிக்கள்
பேரணியில் பெண் எம்பிக்கள் திரிணாமுல் காங்கிரசின் மஹுவா மொய்த்ரா மற்றும் மிதாலி பாக் ஆகியோர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு ராகுல் உள்ளிட்ட எம்பிக்கள் உதவினர். பின்னர் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர்.

* கைது செய்தது ஏன்?
எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது செய்யப்பட்டது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘‘தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு 30 எம்பிக்கள் மட்டுமே கூட்டாக செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதை மீறி அதிக அளவில் எம்பிக்கள் கூடியதால் அவர்களை கைது செய்தோம். தேர்தல் ஆணையம் நோக்கி போராட்ட பேரணி நடத்த யாரும் தேர்தல் ஆணையத்திடம் முன்அனுமதி கேட்கவில்லை. ஆனாலும், 30 எம்பிக்கள் மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு செல்ல முடியும் என்பதை எம்பிக்களிடம் நாங்கள் கூறியிருந்தோம்’’ என்றார்.

* அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான போராட்டம்: ராகுல் காந்தி
பேரணியில் கைது நடவடிக்கைக்கு பின்னர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘இது அரசியல் போராட்டம் அல்ல. அரசியலமைப்பை காப்பதற்கான போராட்டம். ஒரு நபருக்கு ஒரு வாக்குக்கான போராட்டம். எங்களுக்கு நியாயமான, நேர்மையான, சுத்தமான வாக்காளர் பட்டியல் வேண்டும். தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் நேர்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதை வலியுறுத்தியே இந்த பேரணியை நடத்தினோம். ஆனால், அதையும் காவல்துறை வைத்து ஒன்றிய அரசு தடுக்க பார்க்கிறது. இது அவர்களுக்கு தற்காலிக வெற்றியாகவே இருக்கும். எதிர்க்கட்சிகள் இதை எளிதில் விடமாட்டோம்’’ என்றார்.

* பாஜவின் சதியை அம்பலப்படுத்துவோம்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ‘‘மக்களின் வாக்களிக்கும் உரிமையை பாதுகாப்பதற்கான போராட்டம் இது. ஜனநாயகத்தையும் இந்தியாவையும் காப்பாற்றுவதற்கான போராட்டம். பாஜவின் கோழைத்தனமான சர்வாதிகாரம் இனி செயல்படாது. அரசியலமைப்பைச் சிதைக்கும் பாஜவின் சதியை இந்தியா கூட்டணி கட்சிகள் நிச்சயமாக அம்பலப்படுத்தும்’’ என்றார்.

* ஆவணத்தில் கையெழுத்து போட ராகுல் மறுப்பது ஏன்?
கடந்த 7ம் தேதி வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி பல ஆதாரங்களை வெளியிட்ட நிலையில் அந்த ஆவணங்களை கையெழுத்திட்டு சமர்பிக்க தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. அதை செய்யாவிட்டால் ராகுல், பொய்யான குற்றச்சாட்டை கூறியதாக தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென கூறி உள்ளது. இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, ‘‘நான் வெளியிட்ட அனைத்து தரவுகளும் தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற்றவை. அவர்களின் இணையதளத்தில் இருந்து எடுத்த தரவுகள். என்னுடையது கிடையாது. அப்படியிருக்கையில் நான் ஏன் கையெழுத்திட வேண்டும். இது, தேர்தல் ஆணையத்தின் திசை திருப்பும் முயற்சி’’ என்றார்.

* நாடாளுமன்றம் முன்பாக ஜனநாயக படுகொலை
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘தேர்தல் ஆணையத்திடம் எங்கள் கோரிக்கையை தெளிவாக கூறியிருந்தோம். அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்களும் அமைதியான பேரணியை நடத்துவார்கள். பேரணி முடிவில் கூட்டாக எங்கள் கோரிக்கை மனுவை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவோம் என கூறியிருந்தோம். ஆனால் தேர்தல் ஆணையத்தை அடையக் கூட எங்களை விடவில்லை. நாடாளுமன்றத்தின் முன் ஜனநாயகம் தாக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது. இது தேர்தல் ஆணையத்தின் மிகவும் அவமரியாதையான பதில்’’ என்றார்.

* சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி: பாஜ
பாஜ தலைமையகத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அளித்த பேட்டியில், ‘‘எதிர்க்கட்சிகளின் போராட்டம், நாட்டில் ஸ்திரத்தன்மை இன்மையை உருவாக்க திட்டமிட்டு உருவாக்கப்பட்ட உத்தி. காங்கிரசும் பிற எதிர்க்கட்சிகளும் நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க விரும்புகின்றன. பாஜ மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு பொய். வேறு எந்த பிரச்னையையும் எழுப்ப முடியாததால் இதுபோன்ற தந்திரங்களை அவர்கள் கையாளுகின்றனர். இந்தியாவில் ஜனநாயகத்தை அழிக்க விரும்பும் சக்திகளைப் போல ராகுலின் பேச்சு இருக்கிறது’’ என்றார்.

Related Stories: