போபால்: கள்ளக்காதலை கைவிடுமாறு கூறியதால் குடும்பத்தையே தற்கொலைக்கு தூண்டிய மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை மத்திய பிரதேச காவல்துறை கைது செய்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில் கடந்த ஜூலை 26ம் தேதி மனோகர் லோதி (45), அவரது தாய் புல்ராணி (70), மகள் ஷிவானி (18), 16 வயது மகன் ஆகிய நான்கு பேர் தற்கொலை செய்துகொண்டனர். விசாரணையில், மனோகரின் மனைவி திரவுபதிக்கு, தனது கணவரின் நண்பரான சுரேந்திரா என்பவருடன் கள்ளத் ெதாடர்பு இருந்தது தெரியவந்தது. ஒருநாள், தனது தாயும் சுரேந்திராவும் தகாத முறையில் நெருக்கமாக இருந்ததை பார்த்த மகள், இவ்விஷயத்தை தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, குடும்பத்தினர் திரவுபதியிடம் சுரேந்திரா உடனான உறவை கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், சுரேந்திரா இல்லாமல் தன்னால் வாழ முடியாது எனக் கூறிய திரவுபதி, தன்னை தொடர்ந்து வற்புறுத்தினால் வரதட்சணை சட்டத்தின் கீழ் புகார் அளித்துவிடுவதாக குடும்பத்தினரை மிரட்டியுள்ளார். தனது நண்பரான சுரேந்திராவிடமும், தனது மனைவி உடனான கள்ளத் தொடர்பை கைவிடுமாறும் மனோகர் வலியுறுத்தி உள்ளார். இருந்தும் அவர்கள் இருவரின் கள்ளத் தொடர்பு நீடித்தது. மனைவியின் தொடர் மிரட்டல்கள் மற்றும் வீட்டில் நிலவிய உச்சக்கட்ட பதற்றம் காரணமாக, மன உளைச்சலுக்கு ஆளான 4 பேரும் வேறு வழியின்றி தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் 4 பேரின் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்த குற்றச்சாட்டின் பேரில், தற்போது மனோகரின் மனைவி திரவுபதியையும், அவரது கள்ளக்காதலன் சுரேந்திராவையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
