சோனியாவின் தியாகத்தை சுட்டிக்காட்டி சித்தராமையாவை சீண்டிய டி.கே.சிவகுமார்: பதவிப் பகிர்வு விவகாரத்தால் மீண்டும் பரபரப்பு

 

புதுடெல்லி: டெல்லியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் சோனியா காந்தியின் தியாகத்தைப் புகழ்ந்து பேசிய டி.கே.சிவகுமார், அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள மறுப்பவர்களைச் சாடியதன் மூலம் கர்நாடக முதல்வர் பதவிப் பகிர்வு விவகாரத்தை மீண்டும் கிளப்பியுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இடையே ‘முதல்வர் பதவி பகிர்வு’ தொடர்பாக அதிகாரப் போட்டி நிலவி வருவதாகத் தொடர்ந்து பேசப்படுகிறது. இருவருக்கும் இடையே அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் பேசிய முதல்வர் சித்தராமையா, ‘அப்படி எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை; ஐந்தாண்டு காலமும் நானே முதல்வராகத் தொடர்வேன்’ என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் குழு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய டி.கே.சிவகுமார், ‘கடந்த 2004ல் பிரதமர் பதவியை ஏற்குமாறு குடியரசுத் தலைவர் அழைத்தபோது, சோனியா காந்தி ‘எனக்கு அதிகாரம் முக்கியமல்ல’ என்று கூறி, சீக்கியரும், சிறுபான்மையினரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் பிரதமரானால் நாட்டைக் காப்பாற்ற முடியும் என முடிவெடுத்தார். இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் யாராவது இப்படியொரு தியாகத்தைச் செய்திருக்கிறார்களா? சிலர் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவிகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் நம்மில் சிலரோ அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளக் கூட ஒப்புக்கொள்வதில்லை’ என்று பெயர் குறிப்பிடாமல் பேசினார். டி.கே.சிவக்குமாரின் இந்த பேட்டியை பார்க்கும் போது, அவர் சித்தராமையாவைக் குறிவைத்தே இவ்வாறு பேசியதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Related Stories: