சேலம், மார்ச் 20: கொரோனா வைரஸ் பீதியால் கடந்த ஒன்றரை வாரத்தில் வெள்ளி கிலோவுக்கு ₹11,500 சரிந்தது என்று வெள்ளி வியாபாரிகள் தெரிவித்தனர். இந்திய அளவில் சேலத்தில் வெள்ளிபொருட்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு வெள்ளி அரைஞாண்கொடி, கால்கொலுசு, வெள்ளித்தட்டு, டம்ளர், குடம், குங்குமம் சிமிழ் உள்பட பல்வேறு விதமான பொருட்கள் உற்பத்தியாகிறது. சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளி பொருட்கள் வட மாநிலங்களுக்கும், தமிழகத்தில் பல பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.கடந்த பொங்கல் பண்டிகையில் இருந்தே வெள்ளி ஒரு கிலோ ₹48 ஆயிரம் முதல் ₹50 ஆயிரம் என விலையில் மாற்றம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒன்றரை வாரமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பீதி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக வர்த்தக நிறுவனங்கள், நகை கடைகள், சில்வர் கடைகள் உள்பட பல்வேறு கடைகள் மூடப்பட்டுள்ளன. வெள்ளி தொழிலை நம்பி சேலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளனர். கொரோனா வைரஸ் பீதியால் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஒன்றரை வாரத்தில் வெள்ளியின் விலை மளமளவென சரிந்துள்ளது என்று வெள்ளி வியாபாரிகள் தெரிவித்தனர்.