குமாரசாமிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி கோயிலில் தீமிதி விழா

தர்மபுரி, பிப்.21:  தர்மபுரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கி வேண்டுதல் நிறைவேற்றினர். தர்மபுரி டவுன் குமாரசாமிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், மயானக்கொள்ளை விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. நேற்று(20ம் தேதி) காலை 11 மணிக்கு தீமிதி விழா நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 11.30 மணிக்கு ஏராளமான பக்தர்கள் தீமிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர். இதையடுத்து, கோயில் வளாகத்தில் நீண்ட வரிசையில் படுத்து உருளுதண்டம் போட்டு வேண்டுதல் நிறைவேற்றிய பக்தர்கள் மீது அம்மன் கரகம் எடுத்து வந்த பூசாரி நடந்து சென்றது மெய்சிலிர்க்க வைத்தது.விழாவில் இன்று(21ம் தேதி) பொங்கல் வைத்தல், நாளை(22ம் தேதி) பால்குடம் எடுத்தல் மற்றும் திருக்கல்யாணம், 23ம் தேதி மயானக்கொள்ளை பெருவிழா நடக்கிறது. 24ம் தேதி பல்லக்கு உற்சவம், 25ம் தேதி பிள்ளைப்பாவு ஊர்வலம் மற்றும் கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தினர் செய்துள்ளனர். 4ம் கால பூஜை: தர்மபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் சமேத மருதவாணேஸ்வரர் கோயிலில் மாசி மகா சிவராத்திரி 4ம் கால பூஜை விழா இன்று(21ம் தேதி) நடக்கிறது. இன்று மாலை 6.30 மணி முதல் நாளை(22ம் தேதி)அதிகாலை 6 மணி வரை அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனமர் மருதவாணேஸ்வரருக்கு நான்கு கால சிறப்பு பூஜைகள், சோடஷ உபசார பூஜைகள், மகா தீபாராதனை நடக்கிறது.

Related Stories: