கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு

கோவை, ஜன. 29:  கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை அரசு மருத்துவமனையில் தனித்தனி படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தற்போது வரை தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கவில்லை. இதனால், சீனாவில் இருந்து வரும் நபர்களை சம்மந்தப்பட்ட நாடுகள் கண்காணித்து மருத்துவ பரிசோதனை செய்யவும், நோய் அறிகுறிகள் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சீனாவிற்கு சுற்றுலா, வர்த்தகம், கல்வி ரீதியாக ஏராளமானவர்கள் இந்தியாவில் இருந்து சென்றுள்ளனர். இவர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சீனாவில் இருந்து இந்தியா திரும்பும் அனைவரையும் மருத்துவ பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து விமான நிலையங்களிலும் சிறப்பு மருத்து முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களில் சீனாவில் இருந்து தமிழகம் வரும் நபர்களை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து பரிசோதனை செய்து வருகின்றனர். கோவை விமான நிலையத்தில் இருந்து சீனாவிற்கு நேரடி விமான சேவை இல்லை. இருப்பினும், சீனாவில் இருந்து கோவைக்கு வரும் நபர்களின் விவரங்களை அளிக்க விமான நிலைய நிர்வாகத்திற்கு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், கோவை, பொள்ளாச்சியை சேர்ந்த 6 பேர் சீனாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து, அங்கிருந்து கோவை விமான நிலையம் வந்துள்ளனர். இவர்களை கோவை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முழுமையாக பரிசோதனை செய்தனர். அவர்களுக்கு எவ்வித நோய் பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தொடர்ந்து 28 நாட்கள் பொது இடங்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றிக்கு அவர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவுகள் அமைத்து தனி மருத்துவ குழு ஏற்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகன் கூறுகையில், “சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்பேரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், நோய் தொற்று ஏற்படாத வகையில் தனித்தனியாக நோயாளிகள் வைக்கப்படுவார்கள். இதற்காக, மொத்தம் 24 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். தற்போது வரை கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் நோயாளிகள் யாரும் சிகிச்சைக்கு வரவில்லை” என்றார்.

Related Stories: