உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிரம்

தர்மபுரி, டிச.4: உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்தையொட்டி, நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 27ம்தேதி மற்றும் 30ம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. கிராம ஊராட்சிகளுக்கு தேர்தல் முடிந்தபின்னர் பிப்ரவரி மாதம் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.தர்மபுரி மாவட்டத்தில் ஒரு நகராட்சியும், 10 பேரூராட்சிகளும், ஊராட்சி ஒன்றியம் 10ம், கிராம ஊராட்சிகள் 251 உள்ளன. தர்மபுரி நகராட்சியில் 33 உறுப்பினர்களும், 10 ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 18 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10 ஊராட்சி ஒன்றியங்களில், 188 வார்டு உறுப்பினர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10 பேரூராட்சிகளில் 159 வார்டுகளுக்கும், 251 கிராம ஊராட்சி வார்டுகளில் இருந்து 2343 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

2016ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது, பல உறுப்பினர் வார்டுகளை தனி உறுப்பினர் வார்டுகளாக நிர்ணயிக்கப்பட்டு ஒவ்வொரு கிராம ஊராட்சிகளையும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப 6, 9, 12 மற்றும் 15 வார்டுகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி வார்டுகளின் வாக்காளர்களின் எண்ணிக்கைகு ஏற்ப வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்ச வாக்காளர் எண்ணிக்கை 400 ஆகவும், அதிக பட்ச வாக்காளர் எண்ணிக்கை 1000மாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 1,896 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. மொத்த வாக்காளர்கள் 11,59,951 வாக்காளர்கள் உள்ளனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,  தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்தில் 270 வார்டுகளும் 200 வாக்குச்சாவடிகளும், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 315 வார்டுகளும் 230 வாக்குச்சாவடிகளும், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தில் 216 வார்டுகளும் 177 வாக்குச்சாவடிகளும், ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் 105 வார்டுகளும் 94 வாக்குச்சாவடிகளும், அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 318 வார்டுகளும் 222 வாக்குச்சாவடிகளும், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 156 வார்டுகளும் 91 வாக்குச்சாவடிகளும், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 204 வார்டுகளும் 122 வாக்குச்சாவடிகளும், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 279 வார்டுகளும் 200 வாக்குச்சாவடிகளும், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 177 வார்டுகளும் 130 வாக்குச்சாவடிகளும், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் 303 வார்டுகளும் 205 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 2342 வார்டுகளும் 1671 வாக்குச்சாவடிகளும் அமைய உள்ளது. மாவட்டத்தில் மொத்தம், 2741 பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக 1896 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட உள்ளது என்றனர்.

Related Stories: