மாவட்டத்தில் 10 ஆண்டிற்கு மேல் வசிக்கும் ஏழைகளுக்கு இலவச பட்டா

கோவை, ஜூலை 24:  கோவை மாவட்டத்தில் 10 ஆண்டிற்கு மேலாக அரசு நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கள ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.  கோவை மாவட்டத்தில் பேரூர், மதுக்கரை, பொள்ளாச்சி, சூலூர், பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட 225 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் மக்கள் பலர் இலவச மனை பட்டா கேட்டு விண்ணப்பம் கொடுத்து வருகின்றனர்.  வாரந்தோறும் திங்கள் கிழமையில் நடக்கும் மக்கள் குறை தீர்ப்பு முகாமில் 40 முதல் 50 சதவீத மனுக்கள் இலவச மனை பட்டா கேட்டு வருவதாக தெரியவந்துள்ளது.  மாவட்ட அளவில் கடந்த ஆண்டில் இலவச மனை பட்டா கேட்ட 3400க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி தாலூகா அலுவலகங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களுக்கு நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில் மாவட்ட அளவில் கிராம ஊராட்சி பகுதியில் 10 ஆண்டிற்கு மேலாக நத்தம், கல்லாங்கொத்து உள்ளிட்ட புறம்போக்கு இடங்களில் வசிக்கும் ஏழை மக்கள் இலவச மனை பட்டா கேட்டிருந்தால் அந்த நபரின் பெயர் விவரம் தொழில் உள்ளிட்ட விவரங்களை பட்டியலில் பதிவு செய்யவேண்டும்.

 மாவட்ட அளவில் வருவாய்த்துறை, உள்ளாட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை, பொதுப்பணித்துறை உட்பட பல்வேறு அரசு துறைகளின் வசம் உள்ள பயன்பாடில்லாத காலியிடம் குறித்த விவரங்களை சேகரிக்கவேண்டும். வரும் 15 நாளுக்குள் இலவச மனை பட்டா பெற தகுதியான பயனாளிகள் பட்டியலை தயார் செய்யவேண்டும். 10 ஆண்டிற்கு மேலாக வசிக்கும், இலவச மனை இல்லாத ஏழை மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எதாவது கிராமத்தில் 10 ஆண்டிற்கு மேல் வசிப்பவர்கள் இல்லை, 10 ஆண்டிற்கு கீழ் இலவச மனை பட்டா இல்லாத நிலையில் புறம்போக்கு நிலத்தில் ஏழைகள் வசிப்பதாக தெரியவந்தால் அந்த மனுக்களை பரிசீலனை செய்யலாம்.

கிராம அளவில் பட்டியல் தயார் செய்து மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கவேண்டும். தகுதியான பயனாளிகளுக்கு விரைவில் இடம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: