கோவை வேளாண் பல்கலையில்., முதுகலை படிப்பிற்கான நுழைவு தேர்வு

கோவை, ஜூலை 24:  கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பிற்கான நுழைவு தேர்வு நேற்று நடந்தது. இதில், இளங்கலை மாணவர்களுக்கு 6வது பருவ தேர்வு முடிவுகள் தற்போது வரை வெளியிடாத நிலையில், முதுகலை நுழைவு தேர்வு நடத்தி இருப்பது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் எம்.எஸ்.சி., அக்ரி, பூச்சியியல், மைக்ரோ பயோலஜி, உழவியல் உள்ளிட்ட 33 முதுகலை படிப்பு வழங்கப்படுகிறது. இதற்காக சுமார், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதனை தொடர்ந்து முதுகலை படிப்பிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு  கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில், ஆன்லைன் முறையில் முதல் முறையாக நேற்று காலை நடந்தது. பின்னர், மதியம் 2 மணிக்கு நுழைவு தேர்வு நடந்தது.  தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட 21 மாநிலங்களை சேர்ந்த 1,456 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரிகளில் பி.எஸ்.சி.,அக்ரி உள்ளிட்ட படிப்புகளில் படித்த மாணவர்களுக்கு 6வது பருவ தேர்வின் மறுதேர்வுக்கான முடிவுகள் தற்போது வரை வெளியிடவில்லை. இதனால், ஏராளமான மாணவர்கள் முதுகலை படிப்பிற்கான நுழைவு தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறியதாவது:

எங்களுக்கு 4 வருட படிப்பில் 8 பருவ தேர்வு நடத்தப்படுகிறது. பிரேக்கிங் சிஸ்டம் அமலில் இருப்பதால் தேர்ச்சி பெறுவதில் பெரும் சிக்கல் இருக்கிறது. இந்நிலையில், எங்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6வது பருவ தேர்வு நடத்தப்பட்டது. செப்டம்பர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில், தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு மிகவும் காலதாமதமாக கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இதற்கான, ரிசல்ட் தற்போது வரை வெளியிடவில்லை. ஆனால், 8வது பருவ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. முதுகலை படிப்பில் சேர அனைத்து பருவ சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடாத காரணத்தினால் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை. முதுகலை படிப்பிற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.1,500 செலுத்தியுள்ளேன். இதனை திரும்ப பெறவும் முடியவில்லை. பி.எஸ்.சி., அக்ரி மட்டுமின்றி பல துறைகளில் இந்த பிரச்னை இருக்கிறது.

இதனால், மேற்படிப்பு படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் எங்களின் ரிசல்ட் அறிவிப்பிற்கு முன்பு முதுகலை படிப்பிற்கு நுழைவு தேர்வை நடத்தியுள்ளது. இதனால், நாங்கள் முதுகலை படிப்பில் சேர்ந்து படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து பல்கலைக்கழக முதன்மையர் கென்னடி கூறுகையில், “தோல்வி அடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு அளிக்க முடியாது. அவர்கள், அடுத்த வருடம் தான் முதுகலை படிப்பில் சேர முடியும். மேலும், இன்று (நேற்று) நடந்த நுழைவு தேர்வு நன்றாக நடந்து முடிந்தது” என்றார்.

Related Stories: