ஓய்வூதியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு

கரூர், ஜூலை 24: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஒய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.கரூர் மாவட்ட கரூவூலம் மூலம் 4321 ஒய்வூதியர்களும், சார்நிலை கரூவூலங்களான அரவக்குறிச்சியில் 717 ஒய்வூதியர்களும், கரூரில் 332 ஒய்வூதியர்களும், குளித்தலையில் 1932 ஒய்வூதியர்களும், கிருஷ்ணராயபுரத்தில் 278 ஒய்வூதியர்களும், கடவூரில் 225 ஒய்வூதியர்களும் என 7805 ஒய்வூதியர்கள் ஒய்வூதியம் பெற்று வருகின்றனர்.இவர்களின் ஒய்வூதிய பலன்கள், 7வது ஊதியக்குழு நிலுவைத்தொகைகள், ஊதிய முரண்பாட்டால் ஏற்பட்ட ஒய்வூதிய குறைபாடுகள் களைதல், மருத்துவ காப்பீட்டு உதவித்தொகை நிலுவை உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் கடந்தாண்டு 15 மனுக்கள் நிலுவையில் இருந்தது. நடப்பு நிதியாண்டில் 13 மனுக்கள் வரப்பெற்றன. அதில் 12 மனுக்கள் தீர்வு காணப்பட்டது. 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதம் 14 மனுக்கள் நிலுவையில் உள்ளது.கடந்தாண்டும், இந்தாண்டும் சேர்த்து 28 மனுக்கள் மீது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு மனுதாரர் மற்றும் பதில் அளிக்கும் அலுவலர் என இருவர் முன்னிலையில் நடந்தது. அதன்படி, 12 மனுக்கள் தீர்வு காணப்பட்டது. 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள மனுக்கள், நீதிமன்ற வழக்குகள், பணிப்பதிவேடு காணாமல் போனது, அரசாணை பெறுவது போன்ற காரணங்களால் நிலுவையில் உள்ளது. இருந்த போதும் இந்த நிலுவை மனுக்களை விரைந்து முடிக்க துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. ஒய்வூதியர்களின் மீதும் அவர்களின் கோரிக்கை மனுக்கள் மீதும் கனிவுடன் பரிசீலனை செய்து அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து ஒய்வூதியர்களிடம் இருந்து 15 புதிய கோரிக்கை மனுக்களை பெற்று துறை சார்ந்து அலுவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தில் சென்னை ஒய்வூதிய இயக்குநரக இணை இயக்குநர் இளங்கோவன், துணை இயக்குநர் வேலாயுதம், மாவட்ட கரூவூல அலுவலர் ரவிச்சந்திரன், நேர்முக உதவியாளர் கார்த்திக்கேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: