தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்கு எண்ணிக்கை

தர்மபுரி, மே 23: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத்தேர்தல் மற்றும் அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. நாடாளுமன்ற தொகுதி மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் பயன்படுத்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (23ம்தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடக்கிறது.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் மொத்தம் 23 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. அதே போல, அரூர் (தனி) சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் 22 சுற்றுகளாகவும், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாகவும் எண்ணப்பட உள்ளன. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையும் 30 நிமிடங்கள் நடைபெறும். அனைத்து சுற்றுகளும் நிறைவடைந்த பின்னர், வெற்றி நிலவரம் அறிவிக்கப்படும்.

வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 500 பேர் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தில் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை. வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் 900 போலீசாரும், வெளிப்புறம் மற்றும் மாவட்டத்தில் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 300 போலீசாரும் என மொத்தம் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

Related Stories: