பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 15: பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதியில், வாக்குசாவடிகளில் கலெக்டர் மலர்விழி திடீர் ஆய்வு செய்தார். இதில் வாக்குச்சாவடிகளில் நிலவும், குறைகளை சரி செய்ய உத்தரவிட்டார். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடக்கிறது. மேலும், காலியாக உள்ள பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதை தொடர்ந்து வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தாலுகா அலுவலகம், பேரூராட்சி உள்ளிட்ட அரசு அலுவலகங்களில், முதல்வர் மற்றும் ஜெயலலிதா படங்கள் அகற்றப்பட்டன. இந்நிலையில், நேற்று கலெக்டரும், தேர்தல் அலுவலருமான மலர்விழி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளை அவர் ஆய்வு செய்தார். அதில், பாப்பிரெட்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள்  மேல்நிலைப்பள்ளி, மோளையானூர் அரசு பள்ளி, மெணசி, சின்னாங்குப்பம்,  தென்கரைக்கோட்டை, கவுண்டம்பட்டி, அதிகாரப்பட்டி, கொக்கராப்பட்டி, பட்டுகோணாம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள வாக்கு சாவடிகளை கலெக்டர் மலர்விழி ஆய்வு செய்தார். வாக்குபதிவின் போது, வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவது, மாற்றுத்திறனாளிகளுக்கு வேண்டிய வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட எஸ்பி ராஜன், அரூர் ஆர்டிஓ புண்ணியகோடி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: