மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மறியல் செய்த 112 பெண்கள் உள்பட 513 பேர் கைது

தர்மபுரி, ஜன.10: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, தர்மபுரியில் சாலை மறியலில் ஈடுபட்ட 112 பெண்கள் உள்பட 513 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொது வேலைநிறுத்தம் காரணமாக, 2வது நாளாக நேற்று தொமுச, சிஐடியூ, ஏஐடியூ, விசி தொழிற்சங்கம், எல்டிஎப், மாதர் சங்கம், ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஒருங்கிணைப்பு சங்கத்தினர் உள்ளிட்டோர், தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் திரண்டனர். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு ஊர்வலமாக வந்து, தலைமை தபால் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 63 பெண்கள் உள்பட 368 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள், குமாரசாமிப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

பாப்பாரப்பட்டியில், மாவட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், நடந்த போராட்டத்திற்கு சிஐடியூ தொழிற்சங்க மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதன், வட்டார செயலாளர் சின்னசாமி முன்னிலை வகித்தனர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் அர்ச்சுனன், வட்டார செயலாளர் ராஜமாணிக்கம், பொருளாளர் காமராஜ், 47 பெண்கள் உள்பட 95 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், பென்னாகரத்தில் நடந்த மறியல் போராட்டத்தில் 2 பெண்கள் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: