ஸ்டிரைக்கின் போது விடுமுறை எடுத்த அரசு ஊழியர்கள் பட்டியல் சேகரிப்பு

கோவை, ஜன.9:  மத்திய தொழிற்சங்கங்கள் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் நேற்று துவங்கியது.  இந்நிலையில், நேற்று, இன்று விடுமுறை எடுக்கும் அரசு ஊழியர்களின் பட்டியலை சேகரித்து அனுப்ப வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்களை வணிகம் மூலம் விற்பனை செய்வதை தடை செய்து, பொது விநியோக முறையை வலுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்களான ஐஎன்டியூசி, ஏஐடியூ, எச்எம்எ, சிஐடியு உள்பட 10 தொழிற்சங்கங்கள் நேற்று, இன்று என இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

 இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் சங்கம், போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்று போராட்டம் நடத்தினால் விதிமுறை மீறல் செயல் என அறிவிக்கப்பட்டுள்ளது. 8,9 ஆகிய தேதிகளில் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட எந்த பணப்பலன்களும் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், வேலைநிறுத்த நாளில் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடிக்கப்படும். ஒப்பந்த பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

 இந்நிலையில், நேற்று மத்திய அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை மாவட்டத்தில் பல்வேறு துறையை சேர்ந்த 50 சதவீதத்திற்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியை புறக்கணித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அரசு பணிகள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், 8,9 ஆகிய தினங்களில் விடுப்பு எடுத்த மற்றும் போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்களின் பட்டியலை சேகரித்து உடனடியாக அனுப்ப வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விடுமுறை எடுத்த மற்றும் போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்களின் பட்டியல் சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: