கோவை அருகே பரபரப்பு புகையால் சுற்றுச்சூழல் மாசு பவுண்டரியை பொதுமக்கள் முற்றுகை

பெ.நா.பாளையம்,டிச.7:  கோவை அருகே தனியார் பவுண்டரியில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு,சுவாசக்கோளாறு ஏற்படுவதாக கூறி பவுண்டரியை நேற்று பொதுமக்கள் முற்றுகையிட்டனர். கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கேஸ் கம்பெனி பகுதியில் புவனேஸ்வரி நகர், விவேகானந்தா நகர்,ஸ்ரீதேவி நகர்,அண்ணாமலையார் கார்டன் உட்பட 8க்கும் மேற்பட்ட நகரில் சுமார் 5ஆயிரம் குடியிருப்பு உள்ளன. இங்கு தனியார் பவுண்டரி செயல்பட்டு

வருகிறது. பவுண்டரியில் பணி நடக்கும் போது வெளியேறும் கரும்புகை,மண்துகள்கள் அருகில் இருக்கும் வீடுகளில் வந்து விழுகிறது. பவுண்டரியில் இருந்து வெளியேறும் புகை சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு  குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலருக்கு சுவாசக் கோளாறு மற்றும் உடல்நலக்குறைவு ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் நேற்று காலை அப்பகுதியை சார்ந்த 100க்கும் மேற்பட்டோர்  நடவடிக்கைகள் எடுக்க கோரி பவுண்டரி முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். சுற்றுச்சூழல் மாசு மற்றும் உடல்நலக்குறைவு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கும்படி அறிவுறுத்திய தால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: