ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக உள்ள இரும்பு தடுப்புகளை அகற்ற வேண்டும்

தர்மபுரி, நவ.14: ஒகேனக்கல்லில், சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக உள்ள இரும்பு தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஒகேனக்கல் ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு முறையான அடிப்படை வசதிகள் இல்லை. நிழற்கூடம் மற்றும் சாப்பிடும் உணவு கூடம், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் என எந்தவித வசதிகளும் இல்லை. ஏற்கனவே உள்ள உணவுக் கூடத்தில் எந்த வசதியும் இல்லை. மாவட்ட நிர்வாகம் சார்பில், 70 கடைகள் கட்டி மாத வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கடைகளுக்கு சென்றுவர மற்றும் சரக்குகளை எடுத்துச்செல்ல இருசக்கர வாகன வசதி தேவைப்படுகிறது. ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில்,  ஆங்காங்கே சாலையின் நடுவில் பேரிகாடு மற்றும் இரும்பு பைப்புகளை நட்டு தடுத்து வருகின்றனர். இதனால் எந்த ஒரு வாகனமும் செல்ல முடியாத நிலை உள்ளது.

நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா வரும் உடல் ஊனமுற்றோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவர்களுக்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. ஒகேனக்கல்லில் உள்ள ஓம் சக்தி கோயில் மற்றும் முத்து மாரியம்மன் கோயிலில் விசேஷ காலங்களில் தேர் மற்றும் அலகு குத்து விழா நடக்கும். அந்த சமயம் ஊர் மக்களும், பக்தர்களும் அந்த வழியில் செல்ல முடியாதபடி இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, புதியதாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளை அகற்ற வேண்டும்.

Related Stories: