வீடு கட்டித் தருவதாக கூறி ரூ.90 லட்சம் மோசடி கமிஷனரிடம் மக்கள் மனு

திருப்பூர், நவ.14: திருப்பூரில் தவணை முறையில் பணம் செலுத்தியவர்களுக்கு வீடு கட்டி தருவதாக கூறி ரூ.90 லட்சத்துக்கு மேல் மோசடி செய்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: திருப்பூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஒருவர், இடுவாய், சின்னகாளிபாளையம் பகுதியில், தவணை முறையில் பணத்தை பெற்றுக்கொண்டு மூன்று மாதத்துக்குள் வீடு கட்டித்தருவதாக கூறி 120க்கும் மேற்பட்டோரிடம் முன்பணமாக ரூ.90 லட்சத்திற்கு மேல் பெற்று கொண்டு மோசடி செய்துள்ளார். ஆனால், இதுவரை வீடு கட்டி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டுகிறார். ஆகவே, மோசடி செய்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர். இதுகுறித்து போலீஸ் கமிஷனர், புகார் மனு மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: