தர்மபுரி மாவட்டத்தில் விண்ணப்பித்துள்ள பெண்களுக்கு திருமண நிதி உதவி விரைவில் வழங்க நடவடிக்கை

தர்மபுரி, நவ.8: தர்மபுரி மாவட்டத்தில் விண்ப்பித்துள்ள பெண்களில் தகுதியானவர்களுக்கு விரைவில் திருமண உதவி, தாலிக்கு தங்கம் வழங்கப்படும் என்று அமைச்சர் சரோஜா கூறினார்.தர்மபுரி மாவட்ட சமூகநல மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின் கீழ், செயல்படுத்தபடும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் சரோஜா தலைமை தாங்கினார். கலெக்டர் மலர்விழி முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் சரோஜா பேசியதாவது: தமிழக அரசு நடப்பாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்காக ₹545.25 கோடி ஒதுக்கியுள்ளது. 2011ம் ஆண்டு  மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு ₹111.90 கோடி ஒதுக்கப்பட்டது. இத்தொகை தற்போது ₹545.25 கோடியாக அதிகரித்து முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இத்தொகையில் ₹365 கோடி மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.   

தமிழகத்தில் தொடக்கநிலை ஆயத்த பயிற்சி மையங்கள் மூலம், பிறந்த குழந்தைகளை பரிசோதனை செய்து அவர்களுக்கு இருக்கும் மாற்றுத்திறனை எளிதில் கண்டறிந்து அதை குணப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஏற்படும் மாற்றுத்திறனை நிவர்த்தி செய்யவது எளிது. இத்திட்டத்திற்காக மத்திய அரசு சிறந்த மாநிலம் என்று 2013 ஆண்டு அறிவித்து விருது வழங்கியது.  தர்மபுரி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வேண்டி விண்ணப்பித்துள்ள தகுதியானவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். அரசின் நலத்திட்டங்கள் தகுதி உடையவர்களுக்கு விரைவாக சென்று சேர அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லா கான், சப்கலெக்டர் சிவன்அருள், சமூக நல அலுவலர்(பொ) நாகலட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமிர்பாஷா, பழங்குடியினர் நல அலுவலர் சரவணன், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் கீதாராணி, உதவி ஆணையர் (கலால்) முத்தையன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: