கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கமேட்டில் குடிநீர் குழாய் உடைப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர், செப்.19: கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு என்எஸ்கே நகர் நுழைவு வாயில் பகுதியில் ஒரு மாதத்துக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் உள்ள குடிநீர் உடைப்பினை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கரூர் வெங்கமேடு பகுதியில் இருந்து அரசு காலனி, வாங்கல் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கான சாலை உள்ளது. இந்த சாலையின் முகப்பு பகுதியில் என்எஸ்கே நகர் உள்ளது. இந்த நகருக்கு செல்வதற்கான நுழைவு வாயில் பகுதியின் பிரதான சாலையோரத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக சாலையில் கலந்து வருகிறது.

இந்த பிரச்னை சரி செய்யப்படாத காரணத்தினாலும், தொடர்ந்து தண்ணீர் கசிவு போன்ற காரணத்தினால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தை சுற்றிலும் தண்ணீர் நிரம்பி சாலையில் கலந்து வருகிறது.ஒரு மாதத்துக்கும் மேலாக தண்ணீர் கசிந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதால் கொசுக்கள் உற்பத்தி போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே ரேஷன் கடை உட்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் உள்ளன. இதனை சரி செய்ய வேண்டும் என இந்த பகுதியினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு புகார் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, குடிநீர் குழாய் உடைப்பினை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: