கன்னி

9.5.2024 முதல் 15.5.2024 வரை

சாதகங்கள்: ராசிநாதன் புதன் அஷ்டமத்தில் சுக்கிரனோடு இணைந்து உங்கள் தனஸ்தானத்தைப் பார்வையிடுகின்றார். பாக்கியஸ்தானத்தில் குருவோடு சூரியன் இணைந்திருக்க, குரு உங்கள் மூன்றாம் இடத்தையும் ஐந்தாம் இடத்தையும் பார்வை இடுவதால் மிகச் சிறப்பான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளும் பதவி உயர்வும் கிடைக்கும். வணிகம் சிறப்பாக நடைபெறும். மறைந்த புதன் நிறைந்த பலனைத் தருவார். சுக்கிரனோடு இணைந்து உங்கள் தன ராசியைப் பார்ப்பதால், எழுத்து பத்திரிகை துறையில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதைப் போலவே, மேஷத்தில் சுக்கிரன் அமைந்து தன வீட்டை பார்ப்பதால், கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கடன்கள் பைசலாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

கவனம் தேவை: ராசியில் உள்ள கேது அவ்வப்போது மனக் குழப்பத்தைத் தரும். அதில் இருந்து மீண்டு வர வேண்டும். அதைப் போலவே, ஒரு பிரச்னை மிகவும் பூதாகரமாக தோன்றி பின் ஒன்றுமில்லாமல் மறையும் அதற்கு காரணம், ராகு உங்கள் ராசியைப் பார்வையிடுவது, அவரோடு செவ்வாய் இணைந்து இருப்பதால் வீடு வாங்குதல் விற்பது முதலிய விஷயங்களில் சிறிய பிரச்னைகள் வர வாய்ப்புண்டு.

பரிகாரம்: சனிக்கிழமை காகத்திற்கு ஒரு உருண்டை சாதம் வையுங்கள். பிதுர் காரியங்களை மறக்க வேண்டாம்.