புகார் எதிரொலியால் வாக்கு எண்ணும் மையமான கல்லூரியில் மின்னணு சாதனங்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்

கரூர், ஏப்.20: கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் உள்ள ஒரு கட்டிட அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீலிடப்பட்டு 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு எதிரே உள்ள மற்றொரு கட்டிட வளாகத்தில் உள்ள ஒரு அறையில் ஏசி செயல்பட்டதாகவும், கம்ப்யூட்டர்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் ஆனால், அந்த அறை பூட்டப்பட்ட நிலையில் உள்ளதாகவும் தகவல் பரவியது. இதனால், சம்பவ இடத்துக்கு திமுக நிர்வாகிகள், மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, எஸ்பி சசாங்சாய் உட்பட அனைத்து அதிகாரிகளும் விரைந்து சென்று பார்வையிட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான செந்தில்பாலாஜி நேற்று காலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரி வளாக பகுதிக்கு சென்று பார்வையிட்டதோடு, நேற்று முன்தினம் புகாருக்கு உள்ளான எதிரேயுள்ள வேறு கட்டிட அறை பகுதியையும் பார்வையிட்டு அங்கிருந்த கல்லூரி நிர்வாகிகள் மற்றும் போலீசாரிடம் சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொண்டார்.

பின்னர் செந்தில்பாலாஜி இது குறித்து நிருபர்களிடம் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளின் வாக்குப்பதிவான இயந்திரங்களும் இந்த வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் வாக்கு எண்ணும் மையத்தின் பின்புற பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவில்லை. இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டு பின்னர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு வாக்கு எண்ணும் மையத்தின் அருகில் உள்ள கட்டிடத்தின் ஒரு அறையில் ஆள் இல்லாத நேரத்திலும் கணினி உட்பட மின்சாதனங்கள் பயன்பாட்டில் இருந்ததாக திமுகவை சேர்ந்த முகவர்கள் கூறிய புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பார்வையிட்டனர். இந்நிலையில், இன்று (நேற்று) காலை அந்த கணினி அறை மற்றும் சிசிடிவி கண்காணிப்பு அறைகளை தொழில்நுட்ப பணியாளர்கள் உதவியுடன் நேரில் பார்வையிட்டோம். கல்லூரி பணியாளர்கள் அந்த அறைகளில் பிரதான இணைப்பை அணைத்துவிட்டு சென்றதாகவும், ஆனால், சில சாதனங்கள் பயன்பாட்டில் இருந்தது தெரியாது என்று கூறினர். மேலும், ஒரே சர்வரில் அனைத்து சாதனங்களும் இயங்குவதாகவும் கூறப்படுகிறது.

இந்த பதில்கள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் இரண்டு அறைகளிலும் 14 டேபிள்கள் மட்டுமே போடப்பட்டுள்ளது. 77 வேட்பாளர்கள் மற்றும் 355 பூத்துகள் உள்ள கரூர் தொகுதிக்கு வாக்கு எண்ணும் அறைகளில் கூடுதலான டேபிள்கள் தயார் செய்து தர வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளோம்.  மேலும், வாக்கு எண்ணும் மையாக உள்ள இந்த கல்லூரியில் மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகமும், தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியின்போது, அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.

Related Stories: