கொள்ளிடம் வேளாண் அலுவலக கட்டிடத்தில் காலாவதியான பொருட்கள் அகற்றம்

கொள்ளிடம்,ஏப்.19: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண் உதவி இயக்குனர் அலுவலக கட்டிடமும் அதன் அருகில் வேளாண் பொருட்கள் வைக்கும் கிடங்கு கட்டிடமும் உள்ளது. வேளாண் உதவி இயக்குனர் அலுவலக கட்டிடம் மிகவும் பழமையான கட்டிடமாக இருந்து வருகிறது. இந்நிலையில் வேளாண் கிடங்கு கட்டிடத்தில் காலாவதியான பூச்சி மருந்துகள் மற்றும் இடுபொருள்கள் கட்டிடத்தின் முன் பகுதியில் எந்த பயனும் இன்றி கிடந்தன. அப்பகுதியில் ஆடு மாடுகள் வந்து அதனை தின்று விட்டால் அவைகளுக்கு உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழ்நிலை இருந்து வந்தது.

மேலும் இந்த காலாவதியான பூச்சி மருந்து உள்ளிட்ட பொருட்களை அப்பகுதியில் சுற்றுப்புற சுகாதாரத்தை பாதிக்கும் நிலையிலும் இருந்து வந்தது. இதுகுறித்து நேற்று தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குனர் எழில் ராஜா உடனடியாக நடவடிக்கை எடுத்து, வேளாண் கிடங்கு கட்டிடத்தின் முன்பு கிடந்த காலாவதியான மருந்து பொருட்கள் உள்ளிட்ட அனைத்து இடுபொருட்களையும் அகற்றி அப்புறப்படுத்தப்பட்டது. உரிய நேரத்தில் செய்தி வெளியிட்டு நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த தினகரன் இதழுக்கும், அதிகாரிகளுக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

The post கொள்ளிடம் வேளாண் அலுவலக கட்டிடத்தில் காலாவதியான பொருட்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: