கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய லாரி டிரைவரை துவம்சம் செய்த தூத்துக்குடி இளம்பெண்-கோவை அருகே பட்டப்பகலில் பரபரப்பு

சூலூர் : கோவை அருகே தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய லாரி டிரைவரை அந்த பெண் அடித்து உதைத்து துவம்சம் செய்தார். அடி தாங்க முடியாமல் கத்தி, செல்போனை போட்டுவிட்டு, லாரியையும் விட்டுவிட்டு டிரைவர் தப்பி ஓடினார்.தூத்துக்குடியை சேர்ந்தவர் குருமூர்த்தி (40). இவரது மனைவி ஜெயா (37). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கோவை அருகே உள்ள சூலூரில் வசித்து வருகிறார்கள். குருமூர்த்தி அதே பகுதியில் உள்ள பாப்பம்பட்டியில் பேக்கிரி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் குருமூர்த்தி பேக்கிரிக்கு சென்று விட்டார். ஜெயா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வீட்டருகே கோழித்தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.இதனால் இந்த பகுதிக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் வந்து செல்வது வழக்கம். லாரிகள் இங்குள்ள புக்கிங் ஆபீசுக்கு முன்பு நீண்ட வரிசையில் நிற்கும். லாரி டிரைவர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சில டிரைவர்கள் லாரியிலேயே ஸ்டவ் வைத்து சமைத்து சாப்பிடுவதும் வழக்கம். அப்படி ஒரு லாரி டிரைவர் லாரியில் சமைக்க முயன்றார். ஜெயாவின் வீட்டிற்கு வந்து சமைக்க தண்ணீர் கேட்டார். ‘‘அருகில் குடிநீர் குழாய் உள்ளது. அங்கு சென்று தண்ணீர் எடுத்துக் கொள்ளுகள்’’ என்று ஜெயா கூறிவிட்டு சமைக்க வீட்டுக்குள் சென்றார்.சிறிது நேரம் கழித்து அதே நபர் மீண்டும் ஜெயா வீட்டிற்கு வந்தார். அப்போது, ‘‘சமையல் செய்துவிட்டேன். கொஞ்சம் உப்பு வேண்டும்’’ என்று கேட்டார். இதையடுத்து ஜெயா வீட்டுக்குள் சென்று உப்பு எடுக்க முயன்றார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த அந்த டிரைவர் ஜெயாவின் கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போட்டால் கழுத்தை அறுத்து கொன்று விடுவேன் என்று மிரட்டினார். அதிர்ச்சியடைந்தாலும் சுதாரித்துக்கொண்ட ஜெயா கத்தியை வைத்திருந்த டிரைவரின் கையை சுழற்றி பிடித்து மற்றொரு கையால் அவரை கடுமையாக தாக்கினார்.அந்த டிரைவர் திருப்பி மிரட்டியபோதும் அவரை கும்மு கும்மென்று கும்மி எடுத்து துவம்சம் செய்தார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த டிரைவர் அடி உதையை சமாளிக்க முடியாமல் தலை தப்பித்தால் தம்பிரான் புண்ணியம் என்று நினைத்து தான் கொண்டு வந்த செல்போன், கத்தி உள்ளிட்டவைகளை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். அவர் வந்த லாரியையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பிச்சென்றார்.இதுகுறித்து ஜெயா சூலூர் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். கொள்ளையடிக்க முயன்ற நபரை நேருக்கு நேர் எதிர்கொண்டு போராடிய ஜெயாவை அவர் பாராட்டினார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த டிரைவர் விட்டுச்சென்ற கத்தி, செல்போன் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். செல்போன் எண் மற்றும் லாரியின் எண்ணை வைத்து அந்த நபரை தேடி வருகிறார்கள்.‘‘லாரி டிரைவர் அடையாளம் தெரிந்துவிட் டது. அவரை தேடி வருகிறோம். விரைவில் அவரை கைது செய்துவிடுவோம்’’ என்று போலீசார் கூறினர்….

The post கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய லாரி டிரைவரை துவம்சம் செய்த தூத்துக்குடி இளம்பெண்-கோவை அருகே பட்டப்பகலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: