இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் மீனவர்கள் 25 பேர் சிறைபிடிப்பு: 4 நாட்டுப்படகுகளும் பறிமுதல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட நாட்டுப்படகில், 2,500க்கும் அதிகமான மீனவர்கள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இரவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்து சிறை பிடித்தனர். இதில் பாம்பன், தங்கச்சிமடம், நம்புதாளை பகுதியை சேர்ந்த நான்கு நாட்டுப் படகுகளையும் அதிலிருந்து 25 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். இலங்கை கடற்படையின் தீவிர ரோந்தால் மற்ற நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் நஷ்டத்துடன் கரை திரும்பினர். நாட்டுப்படகு மீனவர்களை கைது செய்த சம்பவம் அனைத்து மீனவர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெண்கள் கண்ணீருடன் மறியல்: இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 25 மீனவர்கள், 4 நாட்டுப்படகுகளை விடுவிக்க கோரி நேற்று நாட்டுப்படகு மீனவர்கள், பாம்பன் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பேரணியாக சென்று பேருந்து நிறுத்தம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் பங்கேற்று அவர்களை உடனே விடுதலை செய்யக்கோரி கொளுத்தும் வெயிலில் கதறி அழுதனர். பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகளும் அழுதபடி தாயுடன் போராட்டத்திற்கு வந்தனர். அதிகாரிகள் வந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.
மீன்பிடி தடைக்காலம் முடிந்து 15 நாளே ஆன நிலையில் ஏற்கனவே இலங்கை கடற்படை 36 மீனவர்களையும், 5 விசைப் படகையும் சிறைபிடித்தது. நேற்று மேலும் 25 மீனவர்களையும், 4 நாட்டுப்படகையும் சிறை பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் மீனவர்கள் 25 பேர் சிறைபிடிப்பு: 4 நாட்டுப்படகுகளும் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: