கழனிப்பாக்கம் கிராமத்தில் எலும்பு கூடான மின் கம்பங்கள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்போரூர்: கழனிப்பாக்கம் கிராமத்தில் சேதமடைந்த எலும்பு கூடான மின் கம்பங்களை மாற்றி புதிதாக கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநிலை ஊராட்சி கழனிப்பாக்கம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் பெரும் பாலோனோர், வேளாண்மை தொழிலையே பிரதானமாக கொண்டுள்ளனர். இக்கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களை ஒட்டி மின் கம்பங்கள் புதைக்கப்பட்டு விவசாய நிலங்களுக்கும், அதையொட்டிய குடியிருப்பு பகுதிகளுக்கும் மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் மின் கம்பங்கள் சேதமடைந்தால் அவற்றை மின் வாரியத்தினர் உடனடியாக மாற்றி விடுகின்றனர்.

ஆனால், விவசாய நிலங்களின் நடுவே உள்ள மின் கம்பங்கள் சேதமடைந்தால், மின்வாரிய நிர்வாகம் அவற்றை மாற்ற முன்வருவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மின் கம்பங்கள் சேதமடைந்து இருப்பதால், மின் வயர்கள் எப்போது அறுந்து விழுமோ என்ற அச்சத்துடன் தங்களின் நிலங்களுக்கு வேளாண் பணியை கவனிக்க செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆகவே, மானாம்பதி மின்வாரிய நிர்வாகம், கழனிப்பாக்கம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கழனிப்பாக்கம் கிராமத்தில் எலும்பு கூடான மின் கம்பங்கள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: