ஒருவாரத்திற்கு பிறகு வெயில் தலைகாட்டியது குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்து கொட்டுது தண்ணீர்

 

தென்காசி, ஜூலை 10: குற்றாலத்தில் ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று வெயில் காணப்பட்ட நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் ஜூலை மாதம் தொடக்கம் முதலே குளு குளு சூழல் நிலவியது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று வெயில் காணப்பட்டது. சாரல் இல்லை. மாலையில் இதமான காற்று வீசியது. மேற்கு தொடர்ச்சி மலையில் லேசான மேகமூட்டம் காணப்பட்டது. சாரல் இல்லாத போதும் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்தது. மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் பரந்து விழுந்தது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. பழைய குற்றால அருவி, புலி அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ஏராளமான வாகனங்களில் அணிவகுத்து வந்திருந்தனர்.

தண்ணீர் நன்றாக விழுவதால் வரிசை இன்றி குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.‌ போக்குவரத்து நெரிசல் காரணமாக ஐந்தருவி செல்வதற்கு ஒரு வழி பாதை அமல்படுத்தப்பட்டது. நேற்று முன்தினம் மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருந்த ஒருவர் தவறி தடாகத்தில் விழுந்து விட்டார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு அவரை மீட்டனர்.‌ கடந்தாண்டு மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மூன்று பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து தடாகத்தின் மீது கயிறு மற்றும் உயிர் காக்கும் காற்று பைகள் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அதே ேபான்று பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடை மாற்றும் அறை இடிக்கப்பட்ட நிலையில் பெண்கள் உடை மாற்றுவதற்கும் பெரிதும் சிரமம் அடைந்தனர். சீசன் முடியும் வரை தற்காலிகமாக உடை மாற்றும் அறை அமைக்க முன் வர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

The post ஒருவாரத்திற்கு பிறகு வெயில் தலைகாட்டியது குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்து கொட்டுது தண்ணீர் appeared first on Dinakaran.

Related Stories: