மாணவர்களுக்கு உணவு சப்ளை செய்த தொகைக்கான வங்கி உத்தரவாதத்தை சமரச தீர்வு மையத்தில் தாக்கல் செய்ய வேண்டும்: தனியார் பல்கலைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை: மாணவர்களுக்கு உணவு சப்ளை செய்த நிறுவனத்திற்கு பணம் தராத விவகாரத்தில் நிலுவை தொகையை வங்கி உத்தரவாதமாக சமரச பேச்சுவார்த்தையின்போது தாக்கல் செய்ய வேண்டும் என்று தனியார் பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள சாய் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, சிற்றுண்டி ஆகியவற்றை வளசரவாக்கத்தை சேர்ந்த ரஸ்ஸன்ஸ் என்ற கேட்டரிங் நிறுவனம் சப்ளை செய்து வருகிறது. ஆனால், இந்த கேட்டரிங் நிறுவனத்திற்கு சாய் பல்கலைக்கழகம் ரூ.3.29 கோடி பாக்கி வைத்துள்ளது.

இதையடுத்து, தங்களுக்கு பணத்தை தருமாறு உத்தரவிடக்கோரி கேட்டரிங் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ்பாபு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா மற்றும் வழக்கறிஞர் ஏ.தாமோதரன் ஆகியோர் ஆஜராகினர். மூத்து வழக்கறிஞர் வாதிடும்போது, மனுதாரர் நிறுவனத்திற்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையே 2022 செப்டம்பர் மாதம் முதல் 2023 செப்டம்பர் மாதம் வரை கேட்டரிங் சர்வீஸ் சேவை தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து மனுதாரர் நிறுவனம் கேட்டரிங் சேவையை தொடர்ந்தது. இந்த நிலையில் கேட்டரிங் சேவைக்கான தொகை ரூ.3.29 கோடியை பல்கலைக்கழகம் தரவில்லை என்று வாதிட்டார்.

அப்போது, பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் 3ம் நபர். அவருக்கு இந்த வழக்கை தொடர உரிமையில்லை என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த பிரச்னை குறித்து சமரச தீர்வு மையத்தில் இருதரப்பும் தங்கள் வாதங்களை வைக்கலாம். சமரச பேச்சுவார்த்தையின்போது பல்கலைக்கழகம் ரூ.3.90 கோடிக்கான 6 மாத வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பிக்க வேண்டும். சமரச பேச்சுவார்த்தையை மனுதாரர் 8 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: